Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 29 May 2014

மாணவ-மாணவிகளுக்கு அனைத்து சான்றிதழ்களும் பள்ளியில் கிடைக்க நடவடிக்கை

மாணவ - மாணவிகளுக்கு அனைத்து சான்றிதழ்களும் பள்ளியிலேயே கிடைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.வருவாய்த்துறை செயல்பாடுகள் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் வருவாய் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி, கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ஸ்ரீதர், நில நிர்வாக ஆணையர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.அப்போது அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:அரசின் முதுகெலும்பாக விளங்குகின்ற துறை வருவாய்த்துறை. மிகவும் குறுகிய காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அம்மா திட்டம், பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
விரைவு பட்டா மாறுதல், இலவச மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்குவது, உழவர் பாதுகாப்பு திட்டம், வங்கிகள் மூலம் முதியோர் ஓய்வுதியம் வழங்குதல் மற்றும் மாணவ - மாணவிகளுக்கு தேவையான அனைத்து சான்றிதழ்களையும் பள்ளியிலேயே பெற்றுக் கொள்ளுதல் போன்ற திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் உரிய நேரத்தில் சென்றடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மெட்ரிக்குலேசன், ஆங்கிலோ இந்தியன் பெயர் பள்ளிகளுக்கு தடைவிதிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சமச்சீர் கல்வி வந்துள்ளதால் தனியார் பள்ளிகள் மெட்ரிக்குலேசன், ஆங்கிலோ இந்தியன் என்று விளம்பர படுத்த தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. கடலூரை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில் சமச்சீர் கல்வி அமலில் உள்ளது. இதன்படி அரசு பள்ளிகள், தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், ஓரியன்டல் பள்ளிகள் ஆகியவற்றில் சமமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தனியார் பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், ஓரியண்டல் பள்ளிகள் என்று விளம்பரம் செய்து வருகிறது. இது தவறானது. அப்படி விளம்பரம் செய்வதால் அரசு பள்ளிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. சமச்சீர் திட்டத்தின்படி தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகள் பொது கல்வி அமைப்பின் கீழ்தான் செயல்பட்டு வருகிறது. எனவே மெட்ரிக் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், ஓரியன்டல் பள்ளிகள் என்று விளம்பரம் செய்ய தடை விதிக்க வேண்டும்.
இப்படி விளம்பரம் செய்யும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி அரசுக்கு மனு கொடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உயர் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கவேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை நீதிபதிகள் அருணாஜெகதீசன், வைத்தியநாதன் ஆகியோர் விசாரித்து அரசு 3 வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் சஞ்சய்காந்தி ஆஜரானார்.

அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் கணக்கெடுப்பு தொடக்கம் Dinakaran

அமைச்சரின் ஆலோசனையின்படி தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேனிலை பள்ளிகளில் உபரியாக எத்தனை ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள் என்று கணக்கெடுக்கும் பணியை பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை தொடங்கியுள்ளது. இதனால் டிஇடி தேர்வு எழுதிய பட்டதாரிகள் வேலை கிடைக்காதோ என கலக்கம் அடைந்துள்ளனர். நாடாளுமன்ற தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகள் கடந்த 18ம் தேதி நீக்கப்பட்டது. அதற்கு பிறகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நேற்று முன்தினம் டிபிஐ வளாகத்தில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இலவச பொருட்கள் வழங்கவும், ஜூன் 2ம் தேதியே பாடப் புத்தகங்களை வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் உபரியாக பணியாற்றும் ஆசிரியர்கள் குறித்த விவரங்களை திரட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து, தொடக்க கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியல் வந்த பிறகு பணி நிரவல் செய்துவிட்டு அதற்கு பிறகே டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு பட்டதாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். டிஇடி ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சரிபார்ப்பு நடந்து முடிந்துள்ளது. பட்டதாரிகள் அளவில் தமிழ் 9,853, ஆங்கிலம் 10,716, கணக்கு 9,074, இயற்பியல் 2,337, வேதியியல் 2,667, விலங்கியல் 405, வரலாறு 6,210, புவியியல் 526 ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் மொத்தம் 12,000 ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்போவதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சான்று சரிபார்ப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் உடனடியாக ஜூன் மாதம் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று பட்டதாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், நேற்று முன்தினம் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், உபரி ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்க கூறியதால், அதற்கான பணி நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது இட மாறுதல் கவுன்சலிங் மற்றும் பதவி உயர்வு கவுன்சலிங் நடத்தப்படுவது வழக்கம். அதற்கு பிறகு தான் புதிய ஆசிரியர்கள் நியிமிக்கப்படுவார்கள்.
ஆனால் கடந்த 2013ல் எடுக்கப்பட்ட உபரி ஆசிரியர்கள் பட்டியலில் உள்ளபடி இட மாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் செய்ய வேண்டியுள்ளது. இந்த மே மாதம் நடக்கும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இப்போது உபரி ஆசிரியர்கள் பட்டியலை அமைச்சர் எடுக்கச் சொல்லியதால் 2014ம் ஆண்டு பட்டியலும் சேர்ந்தால், அதிக அளவில் இடமாறுதல் வழங்க வேண்டி வரும். அப்படி செய்தால் டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் எத்தனை பேர் பணி நியமனம் பெற முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து டிஇடி தேர்வு எழுதிய பட்டதாரிகள் தரப்பில் கேட்டபோது, டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்று சான்று சரிபார்ப்பு முடிந்துள்ள நிலையில் இந்த ஆண்டு 12,000 ஆசிரியர்கள்தான் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. ஆனால் இப்போது இட மாறுதல், பணி நிரவல் ஆகியவற்றை செய்து முடித்துவிட்டு பட்டதாரிகளுக்கு பணி நியமனம் வழங்கப் போவதாக தெரிவிக்கின்றனர்.
இதை நாங்கள் கண்டிக்கிறோம். இதனால் டிஇடி தேர்வு எழுதியவர்களுக்கு பணி நியமனம் கிடைக்காது. கடந்த ஆண்டு டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமன ஆணைகள் பெற்றவர்கள் போக இன்னும் சிலர் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு எப்போது பணி வழங்குவார் கள். ஆகவே டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதலில் பணி நியமன ஆணைகள் வழங்கி விட்டு, இட மாறுதல், பணி நிரவல் ஆகியவற்றை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். இந்த குழப்பத்தை ஆசிரியர் தேர்வு வாரியம், பள்ளிக் கல்வித்துறை தீர்க்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.

வரும் கல்வியாண்டில் 13 கோடி மாணவர்களுக்கு இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது

இந்திய அளவில் வளர் இளம் பருவத்தில் பெண்கள் 56 சதவீதமும், ஆண்கள் 30 சதவீதமும் ரத்தசோகையால் பாதிக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் 13 கோடி மாணவர்களுக்கு இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் 15 வயது முதல் 19 வயதுக்குள் 5 கோடிக்கும் மேற்பட்டோர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரும்புச் சத்து குறைபாடே இதற்கு முதன்மை காரணம். ரத்த சோகையால் பருவம் அடைதல்,மாதவிலக்கு மற்றும் மகப்பேற்றின் போது பெண்கள் உடல் ரீதியான பிரச்னைகளை சந்திக்கின்றனர். தொடர் சோர்வு மற்றும் கவனக்குறைவு போன்ற பிரச்னைகளால் படிப்பிலும் கவனம் குறையும். வாரம் தோறும் இரும்புச் சத்து மாத்திரை மற்றும் இரும்பு சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இக்குறைபாட்டை சரி செய்ய அரசு முயற்சி எடுத்துள்ளது.
இதன் மூலம் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் சுமார் 13 கோடி மாணவர்களுக்கு இந்தாண்டு மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. யுனிசெப் மூலம் இத்திட்டத்தை வரும் கல்வியாண்டில் செயல்படுத்த தன்னார்வலர் களுக்கு நேற்று சேலத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. யுனிசெப் அமைப்பைச் சேர்ந்த பாலமுருகன் கூறியதாவது: இந்தியாவில் 10 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளில் 56 சதவீதத்தினரும், ஆண் குழந்தைகளில் 30 சதவீதத்தினருக்கும் ரத்த சோகை இருப்பதாக தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் பெண் குழந்தைகளுக்கு மட்டும் ரத்தசோகை பாதிப்பு இருப்பதாக கணக்கில் கொண்டு இத்திட்டம் பள்ளிகளில் நடைமுறைப் படுத்தப்பட்டது.
இந்தாண்டு இத்திட்டத்தில் ஆண் குழந்தைகளும் சேர்க்கப்பட் டுள்ளனர். ரத்த சோகை, இரும்புச் சத்துக் குறைபாடு, மாணவர்களின் கற்றல் திறனை பாதிப்பதுடன், உடல் நலனிலும் பிரச்னைகளை உருவாக்கும். இப்பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்த இந்திய அரசு தேசிய ஊரக சுகாதார இயக்கம் மூலம் ‘வீக்லி அயர்ன் அண்டு போலிக் ஆசிட் சப்ளிமன்டேசன்‘ என்ற திட்டத்தை கடந்த 2013ம் ஆண்டில் இருந்து அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் செயல்படுத்தி வருகிறது. கடந்த கல்வியாண்டில் தலைமை ஆசிரியர்களுக்கு இது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து இத்திட்டம் பள்ளிகளில் முழுமையாக செயல்படு த்தப்படுகிறதா என்பதை தன்னார்வலர்கள் மூலம் கண்காணிக்க உள்ளனர். இவ்வாறு பாலமுருகன் கூறினார்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், தேர்ச்சி குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு இன்று 'டோஸ்'


பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், தேர்ச்சி குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, இன்று நடக்கும் கூட்டத்தில், "டோஸ்' கொடுக்க கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு, கடந்த 9ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு, 23ம் தேதியும் வெளியானது. திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வு எழுதிய 22,481 மாணவர்களில், 21,158 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்ட தேர்ச்சி விகிதம், 94.12 சதவீதத்தை எட்டியது. அதேபோல், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய, 27,396 மாணவர்களில், 25,855 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்ட தேர்ச்சி, 94.38 சதவீதத்தை பிடித்தது. பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், அரசு, அரசு உதவி பெறும், மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், கடந்த ஆண்டை விட, இந்தாண்டு அதிகரித்துள்ளது. இவ்விரு தேர்வுகளிலும், சில அரசு, மாநகராட்சி, அரசு உதவி பெறும் பள்ளிகள், தேர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ளன. சில பள்ளிகள், சென்டத்தையும் தவற விட்டுள்ளன. தேர்வு முடிவுகளை முழுமையாக கூர்ந்து ஆய்வு செய்துள்ள, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தேர்ச்சி விகித அடிப்படையில், பள்ளிகளை தரம் பிரித்துள்ளனர். பிஷப் உபகாரசாமி பள்ளியில் இன்று, காலை 10.00 மணிக்கு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடக்கிறது.
அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களுக்கு சமச்சீர் பாடப்புத்தகங்கள், சீருடை வழங்கு வது குறித்து, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படும். தேர்வு முடிவுகளை மையமாக கொண்டு, தேர்ச்சியில் முன்னேறியுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்படும். அதேநேரம், பின்தங்கிய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு "டோஸ்' கொடுக்கவும் கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தேர்ச்சி குறைந்த பள்ளிகளில், மாணவர் வருகை, போதுமான அளவு ஆசிரியர்கள் உள்ளனரா போன்ற காரணங்களையும் விசாரித்து, தீர்வு காண, முடிவு செய்துள்ளனர்.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கட்டாய கல்வி சட்டம்: பள்ளி கல்வி துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சி.பி.எஸ்.இ., எனும், மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளில், கட்டாய கல்வி சட்டத்தை அமல்படுத்த, உரிய பிரிவுகளை கொண்டு வர கோரிய மனுவிற்கு பதிலளிக்க, பள்ளி கல்வித் துறை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த, திருமுல்லைவாயிலைச் சேர்ந்த, ஏ.வி.பாண்டியன் என்பவர், தாக்கல் செய்த மனு: இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது. 2010, ஏப்ரலில், அமலுக்கு வந்த இச்சட்டப்படி, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும், மாநில அரசின் அங்கீகாரம் பெற வேண்டும்.
அமல்படுத்த முடியவில்லை:
அதற்கு, மாநில விதிகளில், உரிய பிரிவுகளை சேர்த்திருக்க வேண்டும். ஆனால், மாநில விதிகளில் உரிய பிரிவுகள் இல்லாததால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், மத்திய சட்டம், விதிகளை அமல்படுத்த முடியவில்லை. கல்வி பெறும் உரிமை சட்டம் அமல்படுத்துவதை கண்காணிக்க, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், உரிய அதிகாரியை நியமிக்க, பள்ளி கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துஇருந்தது. சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும், ஏழை, எளிய மாணவர்களுக்கான, 25 சதவீத ஒதுக்கீட்டை நிரப்புவது குறித்தும், உத்தரவிட்டிருந்தது. மாநில அரசைப் பொறுத்தவரை, சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும், மத்திய அரசு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை, புரிந்துள்ளது. ஆனால், மாநில விதிகளில், உரிய பிரிவுகள் சேர்க்காததால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், அமல்படுத்த முடியவில்லை.
உரிய பிரிவுகள்:
எனவே, இலவச கட்டாய கல்வி சட்டத்தை, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அமல்படுத்த, உரிய பிரிவுகளை கொண்டு வர, மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, நீதிபதிகள் அருணா ஜெகதீசன், வைத்தியநாதன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஜி.சங்கரன், கல்வி துறை சார்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி ஆஜராகினர்.
'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவு:
மனுவுக்கு, மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி, பள்ளி கல்வித் துறைக்கு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டு உள்ளது.

ஓய்வூதியர்கள் மருத்துவ காப்பீடு அட்டை பெற வழிமுறைகள்

ஓய்வூதியர்கள், புதிய மருத்துவ திட்டத்திற்கு, ஜூன் 30க்குள், விபரங்களை படிவத்தில் தெரிவித்து, அடையாள அட்டை (ஐ.டி., கார்டு) பெறலாம்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியருக்கான புதிய மருத்துவ திட்டம் வரும் ஜூலை முதல் அமலாகவுள்ளது. இதுவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேரும் ஓய்வூதியர்கள், செலவு செய்தபின், பில்களை, ஓய்வூதிய இயக்குனருக்கு அனுப்பி, சிகிச்சை செலவை பெறுகின்றனர். இனி அவர்கள் சிகிச்சைக்கு சேரும்போதே, அதற்கான அடையாளஅட்டையை காட்டி பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறலாம். இதற்காக அவர்கள் புதிய அடையாள அட்டையை பெற வேண்டும். இதைப் பெற, ஒரு படிவத்தை பூர்த்தி செய்து, கருவூலத்தில் வழங்க வேண்டும். இப்படிவத்தில், ஓய்வூதிய கொடுப்பாணை எண், ஓய்வூதியரின் கணவர் அல்லது மனைவி பெயர் விபரம் தரவேண்டும். அவர் ஏற்கனவே அரசு ஊழியராக இருப்பின், அவரது மருத்துவ கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும். கணவரோ அல்லது மனைவியோ ஓய்வூதியராக இருப்பின், அதன் விபரங்களை குறிப்பிட வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான பிரிமியத் தொகையை, கணவர் அல்லது மனைவியில், யாரிடம் பிடித்தம் செய்வது என குறிப்பிட வேண்டும். ஓய்வூதியர் குடும்ப ஓய்வூதியராக இருந்தால், அதை எந்த வங்கியில் பெறுகிறார் என தெரிவிக்க வேண்டும். ஒருவர் 2 குடும்ப ஓய்வூதியம் பெற்றால், எந்த ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யக் கூடாது என தெரிவிக்க வேண்டும். இவ்விபரங்களை ஜூன் 30க்குள் படிவத்தில் பூர்த்தி செய்து வழங்க வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது.

துவக்கக்கல்வியின் தரம் மேம்பட ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

தமிழகத்தில் துவக்கக்கல்வி தரத்தை மேம்படுத்த, ஆசிரியர்களுக்கு வரும் கல்வியாண்டில் சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முழு அடிப்படை வசதிகள் உள்ள துவக்கப்பள்ளிகளில், புத்தகங்கள் வாசிப்பு, ஆங்கில உச்சரிப்பு, கணித உபகரணங்களை பயன்படுத்துவதில் மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்த, ஆசிரியர்களுக்கு கூடுதல் சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்களில் எப்பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டாலும், விடை எழுதுதல் தொடர்பாக, தேர்வுகளுக்கு தயார்படுத்துதல், எளிதாக ஆங்கிலம், கணிதம் கற்பித்தல் குறித்து, ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடப்புத்தகங்கள், நோட்டுகள், கணித கருவிகள் வழங்கியதும், பயிற்சி அளிக்கப்பட உள்ளது என, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரி ஒருவர் கூறினார்.

பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் புகார் பெட்டி: அரசு உத்தரவு

பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை கண்டறிய, அனைத்து பள்ளிகளிலும், புகார் பெட்டி வைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள், பொது இடங்கள், வீடுகளில் தனியாக இருக்கும், 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு தரப்படுகிறது. இக்குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது, கடுமையான நடவடிக்கை இல்லை. இதன் காரணமாக இக்குற்றங்கள் அதிகரிக்கின்றன. குறிப்பாக, பள்ளிகளில் படிக்கும் 18 வயதிற்குட்பட்ட சிறுமிகள் மீது, பாலியல் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என, குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்புகளுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, தனியார், அரசு பள்ளிகளில் ஆய்வு நடத்தி, அறிக்கை வழங்கவேண்டும். பள்ளி சிறுமிகள் தைரியமாக, புகார் தெரிவிக்க ஏதுவாக, அனைத்து பள்ளிகளிலும், புகார் பெட்டி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாதம் ஒரு முறை இப்புகார் பெட்டியில் உள்ள மனுக்களை தலைமை ஆசிரியர்கள் எடுக்கவேண்டும். மாவட்ட கல்வி அதிகாரிகள், நன்னடத்தை அலுவலர், குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்ட குழுவினர் விசாரித்து தீர்வு காணவேண்டும். புகார்களின் தன்மையை பொறுத்தே, சம்பந்தப்பட்ட குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும், என, சமூகநலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ் படித்தால் தான் 10ம் வகுப்பு தேர்வு எழுத முடியும்: கல்வித்துறை அறிவிப்பு

அடுத்த கல்வியாண்டு (2015-16) முதல், அனைத்து பள்ளிகளிலும் 10ம் வகுப்பில் தமிழ் முதல்பாடமாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் அரசு பொதுத்தேர்வு எழுத முடியும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
சென்னையில், அமைச்சர் வீரமணி தலைமையில், பள்ளிகல்வித்துறை ஆய்வுக்கூட்டம் நடந்தது. முதன்மை செயலர் சபீதா, அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, மெட்ரிக் பள்ளி இயக்குனர் பிச்சை, உயரதிகாரிகள், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள், தொடக்ககல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட வாரியாக, பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம், அதை அதிகரிப்பது எப்படி, மாணவர்களுக்கு அரசின் இலவச நலத்திட்டங்களை வழங்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. அடுத்த கல்வியாண்டு(2015-16) முதல், மெட்ரிக் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும், 10ம்வகுப்பில், தமிழ் முதல் பாடமாக இருக்க வேண்டும். இல்லையெனில், அம்மாணவர்கள், அரசு பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறியதாவது: ஆறாம் வகுப்பில், தமிழ் முதல்பாடமாக கட்டாயம் இருக்க வேண்டுமென, முன்னர் அமல்படுத்தப்பட்ட திட்டம், படிப்படியாக அடுத்தடுத்த வகுப்புகளுக்கு கொண்டுவரப்பட்டு, அடுத்த கல்வியாண்டில், 10ம் வகுப்பில் அமல்படுத்தப்படுகிறது. தமிழ் முதல்பாடமாக இருந்தால் மட்டுமே, அப்பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத முடியும். மாறாக, மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் உள்ளிட்டவற்றை முதல்பாடமாக எடுத்தால், அவர்கள் கண்டிப்பாக தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டது. தமிழ் பாடத்தை கட்டாயமாக்கும் நோக்கிலேயே இவ்வாறு கூறப்பட்டது. தற்போது, பிற மொழியை, முதல் பாடமாக எடுத்து படிக்கும் மாணவர்கள், 500க்கு 500 பெற்றாலும், அவர்களுக்கு, மாநில ரேங்க் தரப்படுவதில்லை. கடந்த கல்வியாண்டில், 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத்திறன் தேர்வு நடத்தப்பட்டது. அதில், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, அவர்களை மேம்படுத்தும் நோக்கில், தமிழ், ஆங்கிலத்தில் வாசிப்பு, எழுத்து பயிற்சி, கணிதப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது, என்றார்.

போலி உத்தரவில் ஆசிரியர்கள் நியமனம்: கோவை மாவட்ட கல்வி அதிகாரி 'சஸ்பெண்ட்'

அரசு பள்ளிகளில், முறைகேடாக, ஆசிரியர் நியமனத்துக்கு துணை போனதாக, கோவை மாவட்ட கல்வி அதிகாரி, தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
கோவை மாவட்டம், வால்பாறை பகுதிகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஏழு ஆசிரியர்கள், 2010க்கு முன், பணியில் சேர்ந்ததாக, பதிவேடு தயாரித்து, பணிநியமனம் முறைகேடாக நடந்தது. இதில், கல்வி அதிகாரிகளுக்கு, தொடர்பு உள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கோவை மாவட்ட கல்வி அதிகாரிகள் குழு, விசாரணை நடத்தி, அரசுக்கு அறிக்கை அனுப்பியது. அதில், ஆசிரியர் பணி நியமனத்தில், முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து, வால்பாறை உதவி கல்வி அதிகாரி காளிமுத்து, தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். விதிமீறி, பணியில் சேர்ந்த ஆசிரியர் கள் ஏழு பேரிடமும் விளக்கம் கேட்டு, கல்வித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது. கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) காந்திமதி கூறுகையில், ''முதல்கட்ட விசாரணையில், புகார் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட ஏ.இ.ஓ., தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இரண்டாம் கட்ட விசாரணை முடிவுகள் கிடைத்தபின், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

ஜூன் 2ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு: இயக்குனர் திட்டவட்டம்

கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 2ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்,'' என, பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார்.
மதுரையில் 11 மாவட்டங்களில், கல்வித் துறை தணிக்கை தடைகளை நீக்குவது, குறித்த ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. மாநில கணக்காயர் சந்தான வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இயக்குனர் ராமேஸ்வரமுருகன் கூறியதாவது: அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 2ல் திறக்கப்படும். இதில் மாற்றம் இல்லை. பிளஸ் 1 வகுப்புகள் ஜூன் 16ல் துவங்கும். மாநிலத்தில் கடந்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில் அரசு பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது. இந்தாண்டு பத்தாம் வகுப்பு தேர்வில், அரசு பள்ளிகளில் மாணவர் தேர்ச்சி 5 சதவீதம் அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறையவில்லை, என்றார். மீனாட்சி சுந்தரேஸ்வரர் பள்ளியில் இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் வழங்கும் பணிகளை அவர் ஆய்வு செய்தார். மாவட்டத்தில், 2,48,252 பாடப் புத்தகங்கள், 1,82,541 நோட்டுக்கள், 43,775 மாணவர்களுக்கான சீருடைகள் வழங்கும் பணி நடக்கிறது.

கூடுதல் பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் 'டிரான்ஸ்பர்': தேவையான பள்ளிகளுக்கு மாற்ற கல்வித்துறை முடிவு

பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை பள்ளிகளில், கூடுதலாக பணியாற்றும், 3,000 பட்டதாரி ஆசிரியரை, ஆசிரியர் தேவை உள்ள பள்ளிகளுக்கு, 'டிரான்ஸ்பர்' செய்ய, சம்பந்தபட்ட இரு துறைகளும், முடிவு செய்துள்ளன.
ஒவ்வொரு வகுப்பிலும், ஆசிரியர் - மாணவர் சராசரி எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்பதை, மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.
ஆசிரியர் பற்றாக்குறை:
அதன்படி, ஆரம்ப பள்ளிகளில், ஒரு ஆசிரியருக்கு, 30 மாணவர் என்ற வீதத்திலும், 5ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை, 1:35, 9ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, 1:40 என்ற வீதத்தில் இருக்க வேண்டும். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில், அறிவியல் பிரிவு வகுப்பாக இருந்தால், 1:40 என்ற வீதத்திலும், தொழிற்கல்வி பிரிவு வகுப்பாக இருந்தால், 1:25 என்ற வீதத்திலும் இருக்கலாம் என, கணக்கு உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, தேசிய வரையறையை விட, ஆசிரியர் - மாணவர் சதவீதம், குறைவாகவே உள்ளது. ஆரம்ப பள்ளிகளில், 10 முதல், 20 மாணவருக்கு, ஒரு ஆசிரியர் என்ற நிலை, பல இடங்களில் உள்ளது. தேவையை விட, பல பள்ளிகளில், கூடுதல், ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். அதே நேரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட, வட மாவட்ட பள்ளிகளில், ஆசிரியர் பற்றாக்குறை, அதிகமாக உள்ளது. இந்த சமநிலையற்ற நிலையை மாற்றி, அனைத்துப் பள்ளிகளிலும், ஆசிரியர் பணியாற்றுவதை உறுதி செய்யும் வகையில், பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. தேவையை விட, கூடுதலாக பணியாற்றும் ஆசிரியர் எண்ணிக்கை, ஆசிரியர் பற்றாக்குறை உள்ள ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை குறித்து, இரு துறைகளும் விவரம் சேகரித்துள்ளன.
பள்ளி திறப்பதற்குள்...:
அதனடிப்படையில், இரண்டிலும், கூடுதலாக உள்ள, 3,000 பட்டதாரி ஆசிரியர்களை, தேவை உள்ள பள்ளிகளுக்கு, 'டிரான்ஸ்பர்' செய்ய, இரு துறை அதிகாரிகளும், முடிவு செய்துள்ளனர். பள்ளி திறப்பதற்குள், இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என, தெரிகிறது. இந்தப் பணி முடிந்த பின், ஜூன், இரண்டாவது வாரத்தில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என, தெரிகிறது. இது குறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பணி நிரவல் (டெப்ளாய்மென்ட்) நடவடிக்கையால், ஆசிரியர்கள், பீதி அடையத் தேவையில்லை. தற்போது ஆசிரியர் பணிபுரியும் மாவட்டத்திற்குள் தான் மாற்றம் இருக்கும். வேறு மாவட்ட மாறுதல், பெரும்பாலும் வராது' என்றார்.

மாநில அரசின் அங்கீகாரம் பெறாமல் செயல்படும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு

மாநில அரசிடம் அங்கீகாரம் பெறாமல் செயல்படும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது.
அங்கீகாரம்
சென்னை ஐகோர்ட்டில், திருமுல்லைவாயிலை சேர்ந்த ஏ.வி.பாண்டியன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தினை 2009-ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த சட்டத்தை 2011-ம் ஆண்டு தமிழக அரசு மாநிலத்தில் அமல்படுத்தியது. இந்த சட்டத்தின்படி சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்கும்போது, சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் அங்கீகாரம் பெறவேண்டும். இதற்காக அந்த பள்ளிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தரம் ஆகியவற்றை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட பள்ளிகளுக்கு மட்டுமே மாநில அரசு அங்கீகாரம் வழங்க முடியும்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆனால், தமிழகத்தில் பல சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மாநில அரசின் அங்கீகாரம் பெறாமலேயே இயங்கி வருகிறது. இவ்வாறு செயல்படும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு இருப்பதால், அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பள்ளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் அருணா ஜெகதீசன், எஸ்.வைத்யநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு 3 வாரத்துக்குள் பதில் மனுவை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

Wednesday, 28 May 2014

அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கைக்கும் பரிந்துரை தேவைப்படும் காலம் விரைவில் வரும்: மாவட்ட திட்ட இயக்குநர்


தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கும் விரைவில் பரிந்துரை தேவைப்படும் அளவில் உள்கட்டமைப்பு வசதி செய்து தரதப்பட்டுள்ளதுடன், தரமான கல்வி, கணினி வழிக் கல்வி என பல்வேறு பிற கலைகளும் கற்றுத் தரப்பட்டு வருகின்றது என்று விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மா.பிரபாகர் கூறினார்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என்ற நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவச யோகா, கராத்தே மற்றும் ஆங்கில பேச்சுப் பயிற்சி நிறைவு விழா புதன்கிழமை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் செ.பாலமுருகன், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லூ.ஜான் சேவியர்ராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா வரவேற்றார்.விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மா.பிரபாகர், விழாவிற்கு தலைமையேற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறை அபரிவிதமான வளர்ச்சி கண்டுள்ளது. கிராமப் புறத்தில் எத்தனையோ மாணவர்கள் வீணாக பொழுதைக் கழித்து வரும் நிலையில், ஒரு ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் மாணவர்கள் விடுமுறை நாட்கள் முழுவதும் வந்து தங்களது உடலுக்கும், உள்ளத்திற்கும் பயனுள்ள பயிற்சிகளை எடுத்துள்ளனர். ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தாழ்தப்பட்ட மக்கள் மட்டும் குடியிருக்கும் இக் கிராமத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நலனில் அக்கறைகொண்டு ஆசிரியர்கள் எடுத்துள்ள முயற்சி பாராட்டுக்குரியது.

இது ஒரு நல்ல முன் உதாராணம். தொடக்கக் கல்வித் துறைக்கு இப் பள்ளி பெருமை சேர்ப்பதாக உள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் அனைத்தையும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அரசின் நோக்கம் நிறைவேற்றப்படும் வகையில் கொண்டு செல்ல வேண்டும். வரும் காலங்களில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு பரிந்துரைகள் தேவைப்படும் அளவிற்கு பள்ளிக் கல்வித் துறை அபரிவித வளர்ச்சியை அடைந்து வருகிறது என்றார் அவர்.