உங்கள் படைப்புகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல்:trstrichy@gmail.com, To Join facebook
Flash News
Flash News
Wednesday, 30 October 2013
Tuesday, 29 October 2013
டி.ஆர்.பி., தமிழ் பாடத்திற்கான மறுதேர்வு உத்தரவு ரத்து!
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வுசெய்ய, டி.ஆர்.பி., நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில், தமிழ் பாடத்திற்கு மறுதேர்வு நடத்த அளிக்கப்பட்ட உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, முதுநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான, ஆசிரியர் தகுதித் தேர்வை கடந்த ஜுலை மாதம் டி.ஆர்.பி., நடத்தியது. இதில் தமிழ் பாடத்திற்கு நடத்தப்பட்ட தேர்வில், வினாத்தாளில் அதிகளவிலான பிழைகள் இருந்தன.எனவே, பெரிய குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழ் பாடத்திற்கான தேர்வை ரத்துசெய்து, அப்பாடத்திற்கு மட்டும் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டது.ஆனால், இத்தீர்ப்பை எதிர்த்து, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, மறுதேர்வு நடத்துமாறு அளிக்கப்பட்ட உத்தரவை ரத்துசெய்து தீர்ப்பளித்தது.
ஆசிரியை உயிரோடு எரிப்பு: பள்ளி ஆய்வாளர் தலைமறைவு
ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றும் 27 வயது ஆசிரியை உயிரோடு தீ வைத்து எரிக்கப்பட்டார். 90 சதவீத தீக்காயம் அடைந்த அந்த ஆசிரியை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
சில மாதங்களுக்கு முன் அந்த ஆசிரியைக்கு பள்ளியின் ஆய்வாளர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுபற்றி புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, புகாரை வாபஸ் பெற வலியுறுத்தி மிரட்டியுள்ளனர். வாபஸ் பெற மறுத்ததால் ஆசிரியை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார்.
இதில் முக்கிய குற்றவாளியான பள்ளி ஆய்வாளர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். பள்ளி ஆய்வாளர், மாவட்டக் கல்வி ஆய்வாளர் மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஏன் தனது பிள்ளையை தனியார் பள்ளியில் சேர்கின்றனர்?
அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கே அரசு பள்ளியின் மீது நம்பிக்கையில்லையா? இது போன்ற கேள்விகள் பெருமளவில் பரவலாகக் கேட்கப்படுகிறது.. பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில
அளவில் சிறப்பிடம் பிடித்தவர்களில் 99 சதவீதத்தினர் தனியார் பள்ளியில் பயின்றவர்கள். அவர்களின் பெரும்பாலானோரின் பெற்றோர், அரசு பள்ளி ஆசிரியர்கள்! அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதான இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இன்று நேற்றல்ல, காலம் காலமாய் நிகழ்ந்து வருவது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர் என்பதே மக்களின் பொதுவான குற்றச்சாட்டு. அரசுப் பள்ளிகளின் மீது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கே நம்பிக்கையில்லை!" என்பதே இந்த விமர்சனத்தின் சாரம்.
அரசாங்க மருத்துவர்கள் தங்கள் குழந்தைகளை மேலான சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் அனுமதிப்பதில்லையா? அதனால் அவர்களுக்கு அரசு மருத்துவர்களின் மீதும், அவர்களின் திறமையின் மீதும் நம்பிக்கையில்லை என்று அர்த்தமா? அரசாங்க மருத்துவமனைகளில் தகுந்த வசதிகள் இல்லாதபோது தனியார் மருத்துவமனையை நாடுவதில் தவறென்ன இருக்க முடியும்? அல்லது, அரசு பணிகளில் அமர்ந்திருக்கும் பல லட்சம் மக்கள் தங்கள் பல்வேறு தேவைகளுக்காக தனியார் அமைப்புக்களை நாடுவதில்லையா? அதுபோலவே, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளை நாடுவதும்! ஒரு நாளில் குறைந்தபட்சம் அரைமணி நேரம் பயணிக்கக் கூடிய பேருந்துகளில் கூட வீடியோ ,ஆடியோ குளிர்சாதன வசதி என்று ஆயிரம் வசதிகளை எதிர்ப்பார்க்கும் மக்கள், அரசு பேருந்துகள் காலியாகவே இருந்தாலும் அதை தவிர்த்து தனியார் பேருந்துகளில் முண்டியடித்து பயணிப்பதில்லையா? அதற்காக, நாம் மக்களை குறை கூறுகிறோமா? அரைமணி நேர பயணத்திற்கே ஆயிரம் வசதிகள் எதிர்ப்பார்க்கும் நாம், தங்கள் குழந்தைகள் ஆண்டுமுழுவதும் பயிலக்கூடிய பள்ளிகள் அடிப்படை கட்டமைப்புகளுடனும் மேலான வசதிகளுடனும் இருக்கவேண்டும் என்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களின் எதிர்பார்ப்பை மட்டும் ஏன் குறை கூற முற்படுகிறோம்? நம் குழந்தைகள் வீட்டில் அனுபவிக்கும் வசதிகளை பள்ளியிலும் அனுபவிக்க வேண்டும்;சுத்தமான குடிநீரும் கழிப்பறை வசதிகளும் கொண்ட தூய்மையான ஆரோக்கியமான சூழலில் தங்கள் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்பது எல்லா விதமான பெற்றோரின் எதிர்ப்பார்ப்பும் தானே? இதில் அரசுப் பள்ளி ஆசிரியர், மற்ற பெற்றோர் என்ற பாகுபாடு ஏன்? அரசுப் பள்ளிகளில் தரமான கற்பித்தல் நடைபெறுவதில்லை என்பதும், தனியார் பள்ளிகளில் நல்ல தேர்ச்சி வருகின்றது என்பதும் ஒரு மாயை. ஒரு வீட்டில் இருக்கும் இரு குழந்தைகளில் ஒரு குழந்தை நன்றாக உணவு உட்கொள்பவனாகவும், அடுத்த குழந்தை சாப்பிடவே மறுப்பவனாகவும் இருக்கின்றனர். இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி உணவுதான்; ஒரே மாதிரி சுவைதான்; ஆனால், ஒரு குழந்தை மட்டும் சாப்பிட மறுக்கும்போது, அதற்காக நாம் அந்தத் தாயின் சமையலை குறை கூறவியலுமா? தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் அந்த முதல் குழந்தையை போல. அவர்களை யார் வேண்டுமானாலும் பயிற்றுவிக்க முடியும்? ஆனால், அரசு பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் இரண்டாவது குழந்தையைப் போல. இவர்களை பயிற்றுவிப்பவர்கள்தான் திறமைசாலிகள். அந்த வகையில் பார்த்தால் கிராமப்புறப் பின்புலத்தில் இருந்து எந்தவித அடிப்படை வசதிகளும் பெற்றோரின் வழிக் காட்டுதலும் இன்றி இரண்டாவது பிள்ளையைப் போல ஆர்வமின்றி படிக்க வரும் ஏழைக் குழந்தைகளை சிரமப்பட்டு படிக்கவைத்து தேர்ச்சி பெற அயராது உழைப்பவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்களே! தேர்வு முடிவுகள் வந்த சில நாட்களுக்கு மட்டுமே அரசு பள்ளிகள் மீது தங்கள் பார்வையை வீசும் ஊடகமும், கருத்தாளர்களும் சாதாரண நாட்களில் பள்ளியை எட்டிப் பார்ப்பது உண்டா? காலையில் பள்ளி நுழைவு வாயிலிலேயே சிகரெட் துண்டுகளை கடந்து,வகுப்பறையின் எதிரில் அவசர கோலத்தில் வீசப்பட்டு கிடக்கும் கால்சட்டைகளையும், கேட்பாரற்று கிடக்கும் மலிவு விலை கால்கொலுசையும், கழுத்து சங்கிலியையும், அவற்றை புரிந்தும் புரியாமலும் பார்க்கும் பிள்ளைகளையும் கடந்து வகுப்பறைக்குள் நுழைநதால், ஜன்னல் வழியே வீசப்பட்டு நொறுங்கிக் கிடக்கும் மதுபாட்டில்களின் சிதறல்களை சுத்தம் செய்வது யார் என்ற பட்டிமன்றதிலுமே மூன்றாம் பாடவேளை வரை கடந்துவிடுகிறதே அதையா வது அறிந்ததுண்டா? வகுப்பறையில் மொபைல் பயன்படுத்துவது தவறு என்பதற்காக பாடம் நடத்திக் கொண்டிருக்கையில், அதனை கவனிக்காமல் மாணவன் பார்த்துக்கொண்டிருந்த அலைபேசியை வாங்கி அதிர்ச்சியிலும் அருவெறுப்பிலும் உறைந்து போகும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், தொடர்ந்து அவ்வகுப்பில் பாடம் கற்பிக்க இயலாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனரே... அவர்களின் நிலையையாவது இவர்கள் அறிவாரா? பிள்ளைகளை கடிந்து ஒரு வார்த்தை பேசக்கூடாது, தண்டிக்கக் கூடாது, மீறினால் சிறைவாசம் என்று ஆசிரியர்களுக்கு ஆயிரம் கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசு மாணவர்களுக்கு அளித்திருக்கும் கட்டுப்பாடில்லா சுதந்திரம் அவர்களை தறிக்கெட்டு அலையவிட்டு இருப்ப தையாவது அறிவார்களா? கண்ட இடங்களில் எச்சில் துப்புவது,பள்ளியிலேயே - அடித்துவிட்டு ஆசிரியர் மீதே இடிப்பது,செவிகளை பொத்திக்கொள்ளும் அளவுக்கு அருவெறுக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்துவது என்று சமுதாயத்தின் அத்தனை அவலங்களையும் ஒருங்கே கொண்டதாய் பெரும்பாலான அரசுப் பள்ளிகள் திகழும்போது, தினம் தினம் அவற்றிலேயே உழலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எப்படி தங்கள் பிள்ளைகளை அப்பள்ளிகளில் சேர்ப்பர்? அரசு கொடுக்கும் இலவசங்களை பெற மட்டும் பள்ளிகளுக்கு அவசரமாய் வருகைத் தரும் பெற்றோர்கள் இவற்றை கட்டுப்படுத்த ஏன் முயல்வதில்லை? பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்திற்கு எத்தனை பெற்றோர் தவறாமல் வருகைபுரிகின்றனர்? இப்படிக் கட்டமைப்பு வசதியிலும் ஒழுக்கத்திலும் மோசமாகவே பெரும்பாலான அரசுப் பள்ளிகள் இருக்கும் சூழலில், எந்த அரசுப் பள்ளி ஆசிரியப் பெற்றோர் மனமுவந்து அரசுப் பள்ளிகளை நாடுவர்? பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர்களின் மனனம் செய்யும் திறன் மட்டுமே வளர்க்கப்படுகிறது. மாணவர்கள் அறிவுச்சிறை (intellectual imprisonment)- க்குள் தள்ளப்படுகின்றனர். அரசுப் பள்ளிகளில் மட்டுமே மாணவர்களின் இயல்பான முழு ஆளுமைத்திறன் வளர்ச்சி சாத்தியப்படுகிறது. பகல் கொள்ளையர்களாய் தனியார் பள்ளிகளின் கல்வித் தந்தையர் செயல்படுகின்றனர் என்பதை எல்லாம் அறிந்தும், வேறு வழியின்றியே தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் அரசு தேர்வாணையம் மூலமாகவோ அல்லது ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வென்றவர்களாகவோ மட்டுமே இருகின்றனர். அவர்களிடம் திறமைக்கும் அறிவுக்கும் அனுபவத்திற்கும் குறைவில்லை. ஆகவே, அரசுப் பள்ளிகளின் மீது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கே நம்பிக்கையில்லை என்று இனியும் பொதுவாய் கூறுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்குத் தன்னால் ஆன பங்களிப்பை அளிக்க முயற்சிக்க வேண்டும்.
விற்பனைக்கு வந்த சில நாட்களில் விற்று தீர்ந்த வினா - விடை புத்தகம்
விற்பனைக்கு வந்த இரண்டு நாட்களில் பிளஸ் 2 ஆங்கில கல்வி வினா விடை புத்தகங்கள் விற்று தீர்ந்தது.
பள்ளிக் கல்வித்துறை மற்றும் பி.டி.ஏ., சார்பில் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெரும் வகையில் குறைந்த விலையில் வினா விடை வங்கி புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மாநிலம் முழுவதிலும் 36 மையங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் வினா விடை புத்தங்கள் விற்பனை துவங்கியது. தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வினாவிடை புத்தங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எஸ்.எஸ்.எல்.சி., தமிழ்வழி வினா விடை புத்தகங்கள் 180 ரூபாய்க்கும், ஆங்கில வழி புத்தங்கள் 180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பிளஸ் 2 தமிழ் வழி வினாவிடை புத்தங்கள் 325 ரூபாய்க்கும், ஆங்கில வழி புத்தங்கள் 240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பிளஸ் 2 வினா விடை புத்தங்கள் கடந்த 24ம் தேதி துவங்கியது. இதில், இரண்டு நாட்களில் இங்கு விற்பனை கொண்டு வரப்பட்ட ஆங்கில வினா விடை விடை புத்தங்கள் விற்பனை ஆனது.
நேற்று (அக்., 26) ஆங்கில வழி வினா விடை புத்தங்களை வாங்க வந்த மாணவ, மாணவிகள் புத்தகங்கள் இன்றி ஏமாற்றத்துடன் திரும்பினர். கூடுதல் வினா விடை புத்தங்கள் கேட்டு பள்ளிக் கல்வித்துறைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
விடுபட்டுள்ள தாவரவியல் உள்ளிட்ட பாடங்களின் வினா விடை புத்தகங்களை உடனடியாக விற்பனைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்களை பள்ளிக் கல்வித்துறை எடுக்க மாணவர்கள் மற்றும் பொற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியது: "தற்போது முதற்கட்டமாக பெரும்பாலான பாடங்களின் வினா, விடை புத்தங்கள் வந்துள்ளன. ஆனாலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கியமான பாடமான தாவரவியல் மற்றும் விலங்கியல் உள்ளிட்ட பாடங்களின் வினா விடை தற்போது விற்பனைக்கு வரவில்லை. இப்பாடங்களின் வினாவிடை புத்தங்களை மாணவர்களுக்கு வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." இவ்வாறு கூறினார்
கட்டணம் உயர்த்தும் பள்ளிகள் வழக்கில் மேல் முறையீடு தேவை
அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை உயர்த்துவதற்காக சிறுபான்மையினர் பள்ளிகள் தொடரும் வழக்கு மீது மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்கம் கட்டண குழுவிடம் முறையிட்டுள்ளது. தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்த அமைக்கப்பட்ட கட்டணக் குழு 2010ம் ஆண்டு முதல் கட்டணம் நிர்ணயித்துவருகிறது. சில பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதாக கமிட்டிக்கு கடந்த ஆண்டு வரை 400க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன. பள்ளி நிர்வாகிகள் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். கூடுதலாக பெற்ற தொகை திரும்ப பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிறுபான்மையினர் பள்ளிகள் அந்த கட்டணம் போதவில்லை என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கட்டணத்தை உயர்த்தி உத்தரவுகளை பெற்று வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட பெற்றோர் ஒன்று திரண்டு நேற்று கட்டண கமிட்டியில் புகார் தெரிவித்தனர். இது குறித்து தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் அருமைநாதன் கூறியதாவது:
சிறுபான்மையினர் பள்ளிகள் தங்களுக்குள்ள சிறுபான்மை உரிமையின்படி, மற்ற பள்ளிகளைவிட கூடுதலாக கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து, கூடுதலாக கட்டணம் நிர்ணயம் செய்துள்ளனர். இது நியாயமற்றது. எனவே உயர்நீதி மன்ற தீர்ப்புகளை எதிர்த்து கட்டண குழு மேல் முறையீடு செய்ய வேண்டும். இது குறித்து நீதிபதி சிங்கார வேலுவை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளோம். அவரும் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.
கோர்ட் அவமதிப்பு வழக்கு உயர்கல்வி செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆஜராக உத்தரவு
கோர்ட் அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராக மாநில உயர்கல்வி செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம், பழநி பழைய ஆயக்குடி உச்சமன்புதூரை சேர்ந்த வினோத் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: நான் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பிஏ (இங்கிலிஷ் வித் கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷன்) படித்துள்ளேன். 2012ல் பிஎட் முடித்தேன். கடந்த 2012, அக். 14ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டேன். ஆனால் எனக்கு ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. பிஏ ஆங்கிலம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிக்கேசன் படிப்பு, பிஏ ஆங்கிலத்திற்கு இணையானது இல்லை என்பதால் பணி வழங்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்படிப்பு பிஏ ஆங்கிலத்திற்கு இணையானது என அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை கவனத்தில் எடுக்காமல் என்னை ஆசிரியர் பணிக்கு நிராகரித்துள்ளனர். இதை எதிர்த்து ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்«ன். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் படிப்பு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் விசாரித்து 12 வாரத்தில் உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டார்.இதையடுத்து, பிஏ ஆங்கிலம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிக்கேசன் படிப்பு, பிஏ ஆங்கிலத்திற்கு இணையானது என பள்ளி கல்வி செயலாளர் ஏப்ரல் 30ல் உத்தரவிட்டார். அதன் பிறகும் என்னை பட்டதாரி ஆசிரியராக நியமிக்கவில்லை.
ஐகோர்ட் கிளை உத்தரவை உயர்கல்வி செயலாளரும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரும் அமல்படுத்தவில்லை. எனவே, இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, உயர் கல்வி செயலாளர் சபிதா, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோர் 2 வாரத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
தீபாவளி பண்டிகையின்போது விபத்தில்லாமல் பட்டாசு வெடிக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை
தீபாவளி பண்டிகையின் போது விபத்தில்லாமல் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க ஆசிரியர்கள்மாணவர்களுக்கு அறிவுரை வழங்கவேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
பள்ளிகளுக்கு சுற்றறிக்கை
தீபாவளி 2-ந்தேதி (சனிக்கிழமை) வருகிறது. அன்று பெரும்பாலும் வெடி, பட்டாசு வெடிப்பவர்கள் சிறுவர்கள், வாலிபர்கள்தான் அதிகம். குறிப்பாக பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகள்தான்.
எனவே பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து மாணவர்களிடம் ஆசிரியர்கள் எடுத்து கூறவேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அவர்கள் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அந்த சுற்றறிக்கையின்படி பள்ளிக்கூடங்களில் காலை நேரத்தில் நடைபெறும் இறைவணக்க கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் மாணவர்-மாணவிகளுக்கு பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது பற்றி எடுத்துக்கூறுவார். பின்னர் வகுப்பறையிலும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தக்க அறிவுரை வழங்குவார்கள்.
சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ள விவரம் வருமாறு:-
பாட்டில்களில் பட்டாசு வைத்து வெடிக்காதீர்கள்
*பட்டாசுகளை கொளுத்தும்போது தளர்வான ஆடைகள் உடுத்தாதீர்கள். இறுக்கமான ஆடைகளை அணியுங்கள். டெரிகாட்டான், டெர்லின் ஆகிய எளிதில் பற்றக்கூடிய ஆடைகளை அணியக்கூடாது
* பட்டாசு கொளுத்தும்போது அருகில் வாளி நிறைய தண்ணீர் வைத்துக்கொள்ளவேண்டும்.
*பட்டாசுக்களை கொளுத்தி கையில் வைத்துக்கொண்டோ அல்லது உடம்புக்கு அருகாமையிலோ வெடிக்கவேண்டாம். மாறாக பாதுகாப்பாக தொலைவில் வைத்து வெடியுங்கள்.
* மூடிய பெட்டிகளில் பாட்டில்களில் பட்டாசுகளை உள்ளிட்டு கொளுத்தி வெடிக்காதீர்கள்.
* ராக்கெட்டுகளை வெட்ட வெளியில் குடிசைகள் இல்லாத பகுதிகளில் மட்டுமே செலுத்துங்கள்.
*பட்டாசுகளை விற்பனை செய்யும் கடைகள் முன்பாகவோ அருகிலோ வெடிக்காதீர்கள்.
பெற்றோர் முன்னிலையில்...
*பெற்றோர்கள் முன்னிலையில் பட்டாசுகளை வெடியுங்கள்.
*விவரம் அறியாத சிறுவர்களை பட்டாசு வெடிக்க அனுமதிக்காதீர்கள்.
இந்த பாதுகாப்பு விதிமுறைகளை மாணவர்களிடம் ஆசிரியர்கள் கூறி பள்ளிக்கூடங்களில் செயல்முறையில் பட்டாசு வெடித்தும் காட்டலாம்.
தினம் தோறும் செய்து காண்பியுங்கள்.
இவ்வாறு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)