Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 31 October 2013

தீபாவளியன்று செல்போனில் பூஸ்டர் சலுகை கிடையாது - பிஎஸ்என்எல் அறிவிப்பு

 தீபாவளியன்று மட்டும் பூஸ்டர், ரேட்கட்டர் சலுகைகள் கிடையாது. அதனால் அன்று  செலபோனில் பேசினால், எஸ்எம்எஸ் அனுப்பினால் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது. செல்போன் இணைப்பு பெறும்போது பேசுவதற்கும், எஸ்எம்எஸ் அனுப்புவதற்கும் தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த கட்டணத்தை பூஸ்டர், ரேட்கட்டர் சேவைகள் மூலம் குறைத்துக் கொள்ளலாம்.  அதேபோல் இலவசமாக பேசிக்கொள்ளும், எஸ்எம்எஸ் அனுப்பும் பூஸ்டர் சலுகைகளும் உள்ளன. அதற்கு சேவைகளுக்கும் சலுகைகளுக்கும் ஏற்ப தனியே கட்டணம் செலுத்த வேண்டும். இந்த சலுகைகளுக்கு தீபாவளி, புத்தாண்டு என விழாக்காலங்களில் தடை விதித்து விடுகின்றன செல்போன் நிறுவனங்கள். அதன் மூலம் அதிக வருவாயை செல்போன் நிறுவனங்கள் பெறுகின்றன. அதன்படி இந்த ஆண்டும் தீபாவளியன்று பூஸ்டர், ரேட்கட்டர் சலுகைகள் செல்லுபடியாகாது என்றும், அன்று பேசுபவர்களுக்கு, எஸ்எம்எஸ் அனுப்புபவர்களுக்கு வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து தனது செல்போன் வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளது. மேலும் தகவல் அறிய 1503 என்ற உதவி மைய எண்ணை தொடர்புக்கு கொள்ளலாம். சில செல்போன் நிறுவனங்கள் இதுபோன்ற எந்த தகவலையும் தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பாமல், பூஸ்டர் கட்டணங்களை விழாக்காலங்களில் ரத்து செய்து வருவாய் பார்க்கின்றன.

வவ்வால்களுக்காக பல ஆண்டாக அதிக சத்தம் எழுப்பாத வெடிகளை வெடிக்கும் கிராமம்

காஞ்சிபுரம் அருகே பசுமையான கிராமம் விஷார். இக்கிராம மக்கள் முழுக்க முழுக்க விவசாயத்தேயே நம்பியுள்ளனர். இங்குள்ள தாமரைகுளம் அருகில் பீமமேஸ்வரர் கோயில் உள்ளது. இதனருகில் 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது. இதில் 1000த்துக்கும் மேற்பட்ட வவ்வால்கள் வசித்து வருகின்றன. இவைகள் இரவில் பலஇடங்களில் இரைதேடிவிட்டு இந்த மரத்துக்கு வந்துவிடும். வவ்வால்களுக்கு இடையூறு செய்யாத வகையில் இக்கிராம மக்கள் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் அதிக சத்தம் எழுப்பும் வெடிகளை வெடிப்பதில்லை. மத்தாப்பூ போன்ற சத்தம் வராத வெடிகளையே வெடிக்கின்றனர். இந்த வழக்கத்தை 150 ஆண்டாக கடைபிடித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவர்கள் நாகேந்திரன், பிரசாந்த்திடம் கேட்டபோது, ‘குழந்தை பருவத்தில் இருந்தே மரத்தில் இருக்கும் வவ்வால்களை பார்த்து வருகிறோம். விளையாட்டுக்குகூட வவ்வால்கள் மீது கற்களை எடுத்து எறிவதில்லை’ என்றனர். முருகன், சண்முகம் கூறுகையில், ‘இந்த ஆலமரம் 200 ஆண்டுக்கும் மேலாக இருப்பதாக கூறுகின்றனர். 3 மரங்களில் 2 மரங்கள் விழுந்துவிட்டன. தற்போது இந்த மரம் மட்டும்தான் உள்ளது. வவ்வால்களுக்காக அதிக சத்தம்  உள்ள பட்டாசு வெடிக்காத வழக்கத்தை பல ஆண்டாக கடைபிடித்து வருகிறோம்’ என்றனர்.

டிச.1ல் குரூப்,2 எழுத்து தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்


குரூப் 2 தேர்வு எழுத்து தேர்வு திட்டமிட்டபடி டிசம்பர் 1ம் தேதி நடக்கும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 
தமிழகத்தில் காலியாக உள்ள 1064 அரசு பணிகளில் புதிய அலுவலர்களை நியமிக்க குரூப் 2 தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே தேதி அறிவித்தது. முதல் நிலை எழுத்து தேர்வு டிசம்பர் 1ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் குரூப் 2 தேர்வு நடக்கும் நாளான டிசம்பர் 1ம் தேதி, வேறு சில துறைகள் நடத்தும் போட்டித் தேர்வுகள் நடக்க உள்ளது என்றும், அதனால் குரூப்2 க்கான முதல் நிலைத் தேர்வை வேறு தேதியில் நடத்த வேண்டும் என்று குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கைகயை தேர்வாணையம் பரிசீலித்தது. குரூப் 2 தேர்வு எழுத 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகிறது. இதற்கிடையே அடுத்தடுத்து வரும் வார இறுதி நாட்களில் மற்ற தேர்வுகள் நடக்க இருப்பதால் குரூப் 2 தேர்வை விரைந்து முடித்து முடிவுகளை வெளியிட முடிவு செய்துள்ளது. அதனால் தேர்வாணையம் அறிவித்தபடி டிசம்பர் 1ம் தேதியே குரூப் 2 தேர்வு நடக்கும் என்று அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலை மாஜி துணைவேந்தர் மன்னர் ஜவகர் சஸ்பெண்ட்! : ஓய்வு பெறுவதற்கு முன், அரசு அதிரடி நடவடிக்கை

அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், மன்னர் ஜவகர், பேராசிரியர் பணியில் இருந்து, இன்று ஓய்வு பெறும் நிலையில், நேற்று முன்தினம் இரவு, அதிரடியாக, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கடந்த, 2008 முதல், 2011 வரை, சென்னை அண்ணா பல்கலை துணைவேந்தராக, மன்னர் ஜவகர், பதவி வகித்தார். அ.தி.மு.க., ஆட்சி வந்ததும், துணைவேந்தர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, பல்கலையின், வேலை வாய்ப்பு மைய பேராசிரியராக நியமிக்கப்பட்டார். பணியில் இருந்து, இன்று, ஓய்வு பெற இருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மன்னர் ஜவகர், சஸ்பெண்ட் செய்ததற்கான கடிதம், அவரது வீட்டில் வழங்கப்பட்டது. உங்கள் மீது, பல்வேறு புகார்கள் உள்ளன. அது தொடர்பாக, விரைவில், விசாரணை நடத்த இருப்பதால், பணியில் இருந்து, உங்களை சஸ்பெண்ட் செய்கிறோம் என, கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஓய்வுபெறும் நிலையில், திடீரென, சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதை அறிந்து, மன்னர் ஜவகர், அதிர்ச்சி அடைந்தார். 

இது குறித்து, அவர் கூறுகையில், நான், எந்த தவறும் செய்யவில்லை. எல்லாவற்றையும், இறைவன் பார்த்துக் கொள்வான். எனினும், ஓய்வுபெறும் நாளில், சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது, எனக்கு, கடும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது, என்றார்.

காரணம் என்ன? : அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் நடந்த முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில், தி.மு.க., ஆட்சி காலத்தில், அண்ணா பல்கலையில் நடந்த பல முறைகேடு குறித்து, சட்டசபையில், உயர்கல்வி அமைச்சர், பழனியப்பன், பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். தி.மு.க., ஆட்சி காலத்தில், அண்ணா பல்கலையில், முறைகேடாக, 300 மாணவர், கூடுதலாக சேர்க்கப்பட்டனர். அதற்கான ஆதாரங்கள் உள்ளன என, பழனியப்பன் தெரிவித்தார். விதிமுறைக்கு மாறாக, ஏராளமான மாணவர்கள், அண்ணா பல்கலையில் சேர்க்கப்பட்டதற்கு, மன்னர் ஜவகர் தான் காரணம் என, அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவ்வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: இரண்டாவதாக, பல்கலைக்கு, கம்ப்யூட்டர் வாங்கியதில், பெரும் அளவிற்கு, முறைகேடு நடந்துள்ளது. மேலும், தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வந்த, தன் மனைவி, ஜூவல்சி ஜவகரை, அண்ணா பல்கலையில் உள்ள, வெளிநாட்டு உறவுகளுக்கான மையத்தில், ஆலோசகர் பதவியை வழங்கினார் என்ற குற்றச்சாட்டும், மன்னர் ஜவகர் மீது உள்ளது.

தோல்வி அடைந்த மாணவர்கள் : விதிமுறைக்கு மாறாக, இந்த நியமனத்தை செய்து, அதன் மூலம், மனைவியை, பல்வேறு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார். துணைவேந்தர் பதவியில் இருந்த கடைசி கால கட்டத்தில், பல்கலையில் நடந்த ஆசிரியர் நியமனம் மற்றும் தோல்வி அடைந்த மாணவர்கள், தேர்ச்சி பெற்ற விவகாரம் ஆகியவற்றிலும், மன்னர் ஜவகருக்கு, தொடர்பு இருக்கிறது. இவ்வாறு, அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓய்வு பெறுவதற்கு முன், சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதன் மூலம், அவருக்கான ஓய்வூதிய பணப்பலன்கள் எதுவும், உடனடியாக கிடைக்காது. விசாரணை முடிந்த பிறகே கிடைக்கும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Click Here

தகுதி தேர்வு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு வழக்கின் முடிவை பொறுத்து அமையும்: ஐகோர்ட்


ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில், தேர்வு மற்றும் நியமனங்கள், வழக்கின் முடிவைப் பொறுத்து அமையும்" என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர், எம்.பழனிமுத்து தாக்கல் செய்த மனு:
ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலின் வழிமுறைப்படி, "ஆசிரியர் தகுதி தேர்வில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, தகுதி மதிப்பெண்ணில், 5 சதவீதம் தளர்த்தலாம்" என, கூறப்பட்டுள்ளது. 11 மாநிலங்களில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, தகுதி மதிப்பெண் தளர்த்தப்பட்டுள்ளது.
சில மாநிலங்களில், பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கும், தளர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்திலும், தகுதி மதிப்பெண் தளர்த்தக் கோரி, தாக்கல் செய்த மனு, நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த, மே மாதம், ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு, தகுதி மதிப்பெண்ணை தளர்த்தினால், புதிய தேர்வு தேவையில்லை.
எனவே, புதிய தகுதி தேர்வு தொடர்பான நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று, கருப்பையா, வழக்கறிஞர் ரமேஷ் ஆகியோரும், மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இம்மனுக்கள், தலை மை நீதிபதி அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, "முதல் பெஞ்ச்" முன், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், சிறப்பு அரசு பிளீடர் கிருஷ்ணகுமார், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி ஆஜராகினர்.
இறுதி விசாரணையை, நவ., 18ம் தேதிக்கு தள்ளி வைத்து, "ஆசிரியர் தேர்வு மற்றும் நியமனங்கள், இவ்வழக்கின் மீதான இறுதி முடிவைப் பொறுத்து அமையும்" என,"முதல் பெஞ்ச்" உத்தரவிட்டது.

பள்ளிக் கல்வித்துறைக்கு ஆறாவது அமைச்சர் கே.சி.வீரமணி!

தமிழகத்தின் புதிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக கே.சி.வீரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக அமைச்சரவை அடிக்கடி மாற்றியமைக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே. இதில் பள்ளிக் கல்வித்துறைக்கு மட்டும் இதுவரை 5 அமைச்சர்கள் மாறிவிட்டனர்.இந்த வகையில், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி, பள்ளிக் கல்வித்துறைக்கு 6வது அமைச்சராக தற்போது வந்துள்ளார். இதுதவிர, விளையாட்டு, இளைஞர் நலன் மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை உள்ளிட்ட துறைகளையும் அவர் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறைக்கு புதிய அமைச்சராக விஜய பாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டுமே, இதுவரை, சி.வி.சண்முகம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சிவபதி, வைகை செல்வன், பழனியப்பன் ஆகிய 5 பேர் அமைச்சர்களாக இருந்துள்ளனர். தற்போது ஆறாவது நபராக கே.சி.வீரமணி வந்துள்ளார்.அதேசமயம், உயர்கல்வித் துறையில் இதுவரை அமைச்சர்கள் மாற்றப்படவில்லை. 2011ம் ஆண்டு அரசு பதவியேற்கும்போது நியமிக்கப்பட்ட பழனியப்பன், இதுவரை அதே துறையை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

TET தேர்வு குளறுபடி - TRB தலைவருக்கு ரூ.5,000 அபராதம்

TET முடிவை வெளியிடலாம் - சென்னை ஐகோர்ட் உத்தரவு


பள்ளி மாணவர்களுக்கு அதிகரிக்கும் பிளட் பிரஷர்

உயர் ரத்த அழுத்தம் பொதுவாக 40 வயதைக் கடந்தவர்களுக்கு வரும் பிரச்னை. உணவில் அதிக அளவில் உப்பைச் சேர்த்துக்கொள்பவர்கள், சிகரெட் புகைப்பவர்கள், மன அழுத்தத்தில் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், மது அருந்துபவர்கள், துடிப்பான வாழ்க்கைமுறையைப் பின்பற்றாதவர்களுக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை வரும் என்று மருத்துவ உலகம் கூறுகிறது. ஆனால், புதுச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்று நடத்திய ஆய்வானது பள்ளி செல்லும் குழந்தைகள் மத்தியில் உயர் ரத்த அழுத்தப் பிரச்னை அதிகரித்துள்ளது என்று எச்சரிக்கை மணி அடிக்கிறது.  இதுகுறித்து இந்த ஆய்வை மேற்கொண்ட புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொது மருத்துவத் துறை பேராசிரியர் டாக்டர் கவிதாவிடம் பேசினோம். 

உலக அளவில் டீன் ஏஜ் பருவத்தினர் நான்கு சதவிகிதம் பேருக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளது. 1994-ம் ஆண்டில் இந்தியாவில் 4 சதவிகிதம் குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை இருந்தது. ஆனால் அது தற்போது 8.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் நாங்கள் நடத்திய ஆய்வில் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்கள் 9.6 சதவிகிதம் பேருக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பதைக் கண்டறிந்தோம். மேலும், 10.7 சதவிகிதம் மாணவ, மாணவிகள் உயர் ரத்த அழுத்தத்துக்கு முந்தைய நிலையில் உள்ளனர். இவர்கள் முறையான மருத்துவ சிகிச்சை, வாழ்க்கை முறை மாற்றம் மேற்கொள்வதன்மூலம் உயர் ரத்த அழுத்தப் பிரச்னை வராமல் தவிர்க்க முடியும்.
உயர் ரத்த அழுத்தப் பிரச்னை ஆரம்பநிலையில் வெளியே தெரியாது. குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போது தளர்ச்சி, படபடப்பு, மயக்கம், தலைவலி போன்ற அறிகுறிகள் தெரியலாம். ஆரம்பத்திலேயே இதைக் கண்டறிந்து சிகிச்சை எடுக்காவிடில், மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு, சிறுநீரகப் பாதிப்பு, கண் தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம்.
புதுச்சேரியில் நாங்கள் ஆய்வு மேற்கொண்ட குழந்தைகள் மத்தியில் உடல் பருமன், மன அழுத்தம் மற்றும் துடிப்பற்ற வாழ்க்கை முறை காரணமாக உயர் ரத்த அழுத்தம் பிரச்னை அதிகரித்து வருவதையும் எங்கள் ஆய்வில் கண்டறிந்தோம்.
உடல் பருமன்
உடல்பருமனே உயர் ரத்த அழுத்தத்துக்கு ஆணிவேர். அரசு பள்ளி மாணவர்களில் ஐந்து சதவிகித மாணவர்கள் உடல்பருமனுடன் இருந்தனர். ஆனால் தனியார் பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகளில் 20 சதவிகிதம் பேர் உடல் பருமனுடன் இருந்தனர். உடல்பருமனுள்ள ஆண் மாணவர்களில் இருவரில் ஒருவருக்கும், ஒட்டுமொத்தமாக உடல்பருமனுள்ள மாணவர்களில் 35 சதவிகிதம் பேருக்கும் உயர் ரத்த அழுத்தம் இருப்பதைக் கண்டறிந்தோம்.  உடல்பருமனுள்ள மாணவர்களுக்கு, உயர் ரத்த அழுத்தத்துடன் மாரடைப்பு, சர்க்கரை நோய், மூட்டு தொடர்பான பிரச்னைகள், மூச்சுத் திணறல், தூக்கம் தொடர்பான பிரச்னைகள் வரலாம்.
மன அழுத்தம்
இந்த மாணவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் பிரச்னை ஏற்பட மன அழுத்தமும் மற்றொரு முக்கிய காரணம் என்று கண்டறிந்தோம். அதிலும் அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் உள்ள மாணவ- மாணவிகளுக்கு அதிக அளவில் மன அழுத்தப் பிரச்னை இருந்தது. காலையில் எழுந்தது முதல், இரவு படுக்கச் செல்லும்வரை தொடர்ந்து படிப்பு, வெளியில் சென்று விளையாடாதது, துடிப்பான வாழ்க்கை முறையின்மை, ஆசிரியர்கள், பெற்றோர்களின் நெருக்கடி காரணமாக இவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது. மன அழுத்தம் அதிகரிக்கும்போது உடலில் ரசாயன மாற்றம் ஏற்படுகிறது. இது ரத்தக் குழாய்களைத் தாக்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது.
படிப்பு விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும் பெற்றோர், ஆசிரியர்கள் குழந்தையின் உடல் நலம் பற்றி கவனிக்க மறந்துவிடுகின்றனர். இதுவே இந்த இளம்வயதில் உயர் ரத்த அழுத்தப் பிரச்னை ஏற்படுவதற்குக் காரணமாகிவிட்டது. உயர் ரத்த அழுத்தம் வந்துவிட்டால் அதைக் குணப்படுத்த முடியாது. தொடர்ந்து மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வதன்மூலம் கட்டுக்குள் மட்டுமே வைத்திருக்க முடியும். 10 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயர் ரத்த அழுத்தத்துக்கு முந்தைய நிலையில் உள்ளனர். இவர்கள் இனியாவது விழித்துக்கொண்டால் உயர் ரத்த அழுத்தப் பிரச்னையைத் தவிர்க்கலாம்.
சிகிச்சை முறைகள்:
டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு வரும் உயர் ரத்த அழுத்தம் 50 சதவிகிதம் வேறு ஒரு நோயின் தாக்கமாக இருக்கலாம். இதை செகண்டரி ஹைபர்டென்ஷன் என்று குறிப்பிடுவர்.  
ரத்தக்கொதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், ரீனல் ஃபங்ஷன் டெஸ்ட் மற்றும் அப்டாமினல் ஸ்கேன் செய்யவேண்டும். அது ப்ரைமரியா இல்லை செகண்டரியா என்பதைக் கண்டறிய வேண்டும். செகண்டரியாக இருந்தால், ரத்தக்கொதிப்புடன் அது தொடர்பான  நோய்க்கும் சிகிச்சை அளிப்பது முக்கியமாகும்.
பி.எம்.ஐ. பரிசோதித்து, உடல்பருமன் இருந்தால், உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டு வந்து, ரத்த அழுத்தத்தை வெகுவாகக் குறைக்க வழிசெய்யலாம்.  
மாணவர்களிடமும் ரத்தக்கொதிப்பின் அளவு வேகமாக உயர்வதை அரசு உணர வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறையேனும் அனைத்து பள்ளி மாணவர்களின் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதிப்பெண் முறை மாணவர்களிடம் அதிகளவு மன அழுத்ததை ஏற்படுத்துகிறது. இதை விடுத்து,percentile  மற்றும் grade pointsபோன்ற முறைகளை நடைமுறைப்படுத்தினால், மன அழுத்தமும், ரத்தக் கொதிப்பும் வெகுவாகக் குறையும்.

அலுவலக பணிகளுக்கு ஆசிரியர்களை பயன் படுத்தக் கூடாது - நாமக்கல் DEEO ஆணை

Wednesday, 30 October 2013

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் EMIS விவரங்களை சரி பார்த்து 31.10.2013 க்குள் ஒப்படைக்க உத்தரவு

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் EMIS இல் பதிவேற்றம் செய்த விவரங்களை சரி பார்த்து 31.10.2013 க்குள் ஒப்படைக்க வேண்டும். EMIS இல் அனைத்து விவரங்களும் சரியாக பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது எனவும், இதில் ஏதேனும் தவறு இருப்பின் அதற்கு நான் பொறுப்பு ஏற்கிறேன் என்று தலைமை ஆசிரியர்கள் எழுத்துப் பூர்வமாக உறுதிமொழி அளிக்க வேண்டும் என உத்தரவு இடப் பட்டுள்ளது. 

திருச்சி கருமண்டபத்தில், வாசன் மெடிக்கல் அருகில்  உள்ள i - touch computers உரிமையாளர் திருமதி.பெட்ரிசியா அவர்கள்  ஆசிரியர்களுக்காக EMIS பணிகளை குறைந்த கட்டணத்தில் செய்து தர முன்வந்துள்ளதாக தெர்வித்தார். அவரின் தொலைபேசி 97887 88469.   

தலைமை ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய EMIS உறுதி மொழி படிவம்

தலைமை ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய EMIS  உறுதி மொழி படிவம்


EMIS இல் மாணவர் விவரங்களை OFF-LINE இல் (இணையதள இணைப்பு இல்லாமல்)பதிவேற்றம் செய்தல் , திருத்தம் செய்தல், நீக்கம் செய்தல் எப்படி? - வீடியோ விளக்கம்.


டெங்கு காய்ச்சலுக்கு நில வேம்பு கசாயம், பப்பாளி இலைச்சாறு மருத்துவம் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நில வேம்பு கசாயம் மற்றும் பப்பாளி இலைச்சாறு வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
காலை, மாலை நில வேம்பு கசாயம்
தற்போது மழைக்காலம் நடைபெற்றுக்கொண்டிருப்பதால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் வைரஸ் காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளனர். இவர்களில் சிலர் டெங்கு காய்ச்சலாலும் பாதிப்படைந்துள்ளனர்.
இப்படி, வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு, தமிழக அரசு உத்தரவின்படி, அண்ணாநகரில் உள்ள அரசு சித்த மருத்துவ டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் தினமும் காலை மற்றும் மாலை 2 வேளைகளிலும் நிலவேம்பு கசாயம் மற்றும் பப்பாளி இலைச்சாறு வழங்குகின்றனர். இதனால் நோயாளிகள் விரைவில் குணம் அடைந்து வீடு திரும்புகின்றனர்.
‘எலிசா’ முறை
அலோபதி மருந்துகளை உட்கொண்டபடியே இந்த நிலவேம்பு கசாயத்தை குடிப்பதன் மூலம் மட்டுமே விரைவான நிவாரணம் பெற முடியும். நிலவேம்பில் உள்ள மருத்துவ குணமானது வைரஸ் நோய்களை எளிதில் குணமடைய செய்கிறது.
இது குறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் டாக்டர் வே.கனகசபை கூறியதாவது:-
கடந்த ஆண்டு முதல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு என சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் ‘எலிசா’ முறைப்படி ஆய்வு மேற்கொண்டு, ‘ஐ.ஜி.எம்.’ சோதனை மேற்கொண்டு டெங்கு நோய் கண்டறியப்படுகிறது.
பிற சோதனைகள் டெங்கு இருப்பதாக தவறான தகவல்களை அளிக்க வாய்ப்பு உள்ளது. எனவே ‘எலிசா’ சோதனையே முழுமையான சோதனையாகும். டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிப்பதற்கு போதுமான அளவு ரத்தம் மற்றும் பிளேட்லெட்டுகள் மருத்துவமனையில் இருப்பு உள்ளது.
இந்த மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்ற டாக்டர்கள் தான், மதுரை, நெல்லை மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டபோது, அங்கு சென்று டாக்டர்களுக்கு பயிற்சி அளித்து வந்தனர். அத்தகைய சிறந்த மருத்துவர்கள் பணிபுரிந்து வருவதால் டெங்குவுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பொதுமக்களிடையே வரவேற்பு
தற்போது மழை மற்றும் நுண் கிருமிகள் காரணமாக காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 நாட்களுக்கு பிறகுதான் டெங்கு குறித்த சோதனை செய்ய முடியும். அவ்வாறு டெங்கு நோய் கண்டறியப்பட்ட உடனேயே அவர்களுக்கு ‘சலைன்’ என்ற நரம்பு வழியாக செலுத்தப்படும் உப்பச்சத்து நிறைந்த திராவகம் கொடுக்கப்படுவதால் டெங்கு நோயால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைந்துவிட்டது.
மேலும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு உத்தரவின்படி, அரசு சித்த மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் காலை, மாலை வேளைகளில் நிலவேம்பு கசாயம் வழங்கி வருகிறார்கள். சித்த மருந்து பக்கவிளைவு இல்லாததால் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
உயிர் சேதம் இல்லை
இங்கு மொத்தம் 37 பேர் காய்ச்சலால் பாதிப்படைந்து உள்ளனர். அதில் 8 பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு உள்ளது. அவர்களும் 2 அல்லது 3 நாட்களில் குணம் அடைந்து வீடு திரும்புவார்கள். கடந்த ஆண்டை போன்று, இந்த ஆண்டு டெங்கு நோயினால் எந்த ஒரு உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.
டெங்கு நோயை பரப்பும், ஏ.டி.இ.எஸ். கொசு சுத்தமான நீரில் தான் உற்பத்தி ஆகிறது. எனவே டெங்கு பரவாமல் தடுக்க பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காத வகையில் தேங்காய் சிரட்டை, ரப்பர் டயர் போன்றவற்றை அப்புறப்படுத்துவதுடன், வீடுகளில் பயன்படுத்தப்படும் குடிநீர் பாத்திரங்களை துணியினால் கட்டி வைத்து பயன்படுத்துவதுடன், தினசரி தண்ணீர் பாத்திரங்களை சுத்தம் செய்து தண்ணீர் பிடித்து வைப்பது நல்லது.
இவ்வாறு டாக்டர் வே.கனகசபை தெரிவித்தார்.
2 பேருக்கு டெங்கு நோய்
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் 37 பேர் காய்ச்சலால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் யாருக்கும் டெங்கு நோய் பாதிப்பு இல்லை என்று மருத்துவமனை டாக்டர் அமலா தெரிவித்தார்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 8 பேர் காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளதாகவும், 2 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நவம்பர் 1-ந் தேதி டெங்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மருத்துவமனையில் நடத்த உள்ளதாகவும் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் குணசேகரன் தெரிவித்தார்.

பள்ளியில் விஷம் குடித்த பிளஸ்-2 மாணவர் சாவு துறையூரில் பரபரப்பு

துறையூரில் பள்ளியில் விஷம் குடித்த பிளஸ்-2 மாணவர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிளஸ்-2 மாணவர்
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த வீரமச்சான்பட்டியை சேர்ந்தவர் அண்ணாத்துரை. இவரது மகன் அஜித்(வயது 17). இவர் துறையூரில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இவர் கடந்த 23-ந் தேதி பள்ளிக்கு செல்லும் போது எலிமருந்தை(விஷம்) வாங்கிச் சென்றார். பள்ளி வளாகத்தில் வைத்து யாருக்கும் தெரியாமல் எலி மருந்தை குடித்தார்.
வகுப்பறையில் மயங்கினார்
பின்னர் வகுப்பறையை நோக்கி வேகமாக சென்றார். வகுப்பறைக்கு சென்றதும் மாணவர்கள் முன்னிலையில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது மயக்க நிலையில் இருந்த அஜித்திடம் சக மாணவர்கள் கேட்டனர். அப்போது தனக்கு படிப்பு சரியாக வரவில்லை. என்னால் படிக்க முடியவில்லை என்றும் இதனால் தான் எலிமருந்தை குடித்து விட்டதாகவும் அஜித் கூறினார்.
பரிதாப சாவு
இதையடுத்து அஜித்தை உடனடியாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அஜித் நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அஜித்தின் தந்தை அண்ணாத்துரை துறையூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் துறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லாரன்ஸ், ஏட்டு ஜெயக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி வளாகத்தில் மாணவர் விஷம் குடித்து இறந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.