பெரிய ரயில்நிலையங்களில் கூட கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. தேர்தல் பணிக்கு சென்று திரும்பிய ஆசிரியை, மறைவிடம்தேடி அலைந்தபோது ரயிலில் அடிபட்டு இறந்துள்ளார். இதற்கு பிறகாவது தெற்கு ரயில்வே விழித்துக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரக்கோணத்தைச் சேர்ந்த ஆசிரியை பூங்கொடி. இவர் தேர்தல் பணிக்காக வாணியம்பாடி அருகில் உள்ள கிராமத்துக்கு சென்றுள்ளார். பணிகள் முடிய தாமதமானதால் அன்று இரவு வாணியம்பாடி ரயில்நிலையத்துக்கு சக ஆசிரியைகளு டன் சென்றுள்ளார். அரக்கோணம் செல்லும் ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது பூங்கொடி உள் ளிட்ட இரண்டு ஆசிரியைகள் இயற்கை உபாதை காரணமாக கழிவறையை தேடினர்.
அந்த ரயில்நிலையத்தில் கழிவறை இல்லை. வேறு வழியில்லாமல் வெளியே ரயில் பாதையை ஒட்டிய பகுதிக்கு சென்றுள்ளனர். மற்ற 2 ஆசிரியைகளும் துணைக்கு சென்றுள்ளனர். பின்னர் மீண்டும் ரயில்நிலையம் திரும்பியபோது பெங்களூர் நோக்கிச் சென்ற காவிரி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி படுகாயமடைந்த பூங்கொடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தேர்தல் பணிக்கு சென்ற ஆசிரியை ரயில் மோதி இறந்த தகவல் அறிந்து அங்கு சென்ற மாவட்ட அதிகாரிகள் அன்றிரவே பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் பூங்கொடி உடலை ஒப்படைத்துள்ளனர். இந்த விபத்தை பார்த்த இன்னொரு ஆசிரியை அதிர்ச்சியில் படுக்கையில் கிடக்கிறார். தேர்தல் சம்பந்தப் பட்ட விவரம் என்பதால் அதிகம் வெளியில் வராமல் பார்த்துக் கொண்டனர்.
அதனால் வாணியம்பாடி ரயில்நிலையத்தின் அவலம் வெளியில் வராமல் போய்விட்டது. இத்தனைக்கும் வாணியம்பாடி ஒன்றும் வழி ரயில்நிலையம் அல்ல. தினமும் பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் ரயில்நிலையம். தொழில் நகரம் என்பதால் அங்கிருந்து தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பயணிக்கின்றனர். இருந்தும் அங்கு கழிவறை கிடையாது. குடிநீர் வசதியில்லை. ரயில்வேயின் இந்த அலட்சியத்தால் ஒரு ஆசிரியை உயிர் அநியாயமாக பலியாகி விட்டது. அந்த ஆசிரியை மகளுக்கு மே 4ம்தேதி திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகளில் இருந்தவர் தவிர்க்க முடியாமல் தேர்தல் பணிக்கு சென்றுள்ளார்.
வாணியம்பாடி மட்டுமின்றி தெற்கு ரயில்வேயின் 95 சதவீத ரயில்நிலையங்களில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. பல இடங்களில் நிழற்கூரைகள் கிடையாது. இந்த வசதிகள் இருக்கும் பெரிய ரயில்நிலையங்களிலும் பலவற்றில் இரவு நேரங்களில் கழிவறைகளை மூடி விடுகின்றனர். இதற்கு காரணம் எல்லாம் கட்டண கழிவறைகள் என்பதால் குறிப்பட்ட நேரத்திற்கு மேல் காண்டிராக்டர்கள் ஆட்களை வேலை செய்யவிடுவதில்லை. இரவில் வருவாய் குறைவாக இருக்கும் என்பதாலும், ஊழியர்களுக்கு கூடுதலாக சம்பளம் தரவேண்டியிருக்கும் என்பதால் மூடிவிடுகின்றனர். அதனை வழக்கம் போல் ரயில்வே அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.
வழி ரயில்நிலையங்கள் என்று அழைக்கப்படும், பெரிய ரயில்நிலையங்களுக்கு இடையில் உள்ள சிறிய ரயில்நிலையங்களில் கழிவறைகளே இருப்பதில்லை. கழிவறைகள் இருக்கும் சென்னை புறநகர் ரயில்நிலையங்களில் அவற்றை திறப்பதில்லை. சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, அரக்கோணம், செங்கல்பட்டு மார்க்கத்தில் உள்ள அனைத்து ரயில்நிலையங்களுடன் கழிவறைகள் கட்டி 8 ஆண்டுகள் முடிந்த நிலையில் அந்த கழிவறை களை பூட்டியே வீணாக்கி கொண்டிருக்கின்றனர்.
இதற்காக 5 முறை தெற்கு ரயில்வே டெண்டர் விட்டும் ஒருவரும் எடுக்கவில்லை. காரணம் ரயில்வே நிர்ணயித்துள்ள கட்டணம் அதிகம் என்பதுதான். அதுமட்டுமல்ல பயன்பாட்டில் இருக்கும் கழிவறைகள் அனைத்தும் கட்டண கழிவறைகள்தான். காசை மட்டும் குறி வைத்து தெற்கு ரயில்வே செயல்படுவதால் ரயில்நிலையங்களில் கழிவறைகள் இல்லை. அதனால் பெண்கள், முதியவர்கள், நோயாளிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
No comments:
Post a Comment