Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 30 April 2014

இருக்கை முற்றுகைக்கு உள்ளான உதவி தொடக்க கல்வி அலுவலர்


மடத்துக்குளம் உதவி தொடக்ககல்வி அலுவலரை, ஆரம்பபள்ளி ஆசிரியர்கள், மூன்று மணிநேரம் இருக்கை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மடத்துக்குளம் ஒன்றித்துக்குட்பட்ட ஆரம்ப பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, நிலுவைத்தொகை, அகவிலைபடி ஆகியவை வழங்குவதில் உதவிதொடக்ககல்வி அலுவலர் மற்றும் உதவியாளர் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்வதாகவும், இதை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து, நேற்றுமுன்தினம் மாலை 4.30 மணி முதல் இரவு 7.45 மணி வரை உதவி தொடக்ககல்வி அலுவலர் சிவசுப்பிரமணியத்தை இருக்கை முற்றுகையிட்டனர்.

இதனால் இவர், பணி நேரம் நிறைவடைந்த பின்னும், மூன்று மணி நேரம் தனது இருக்கையிலேயே தற்காலிகமாக சிறைபிடிக்கப்பட்டார்.

இதுகுறித்து ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கூறியது: இந்த அலுவலகத்தின் கீழ் பணியாற்றும், 250 ஆசிரியர்களில், 150 பேருக்கு மட்டும் நிலுவைதொகை மற்றும் இதர படிகள் உடனடியாக வழங்கப்படுகிறது. மீதி உள்ளவர்களின் கோப்புகளை அனுப்பும்போது, அதில் உள்ள ஆவணங்களை திட்டமிட்டு கிழித்தோ, அகற்றியோ அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் எங்கள் கோப்புகள் மறு தணிக்கைக்கு ஆட்படுத்தப்பட்டு, அதிக கால தாமதம் ஏற்படுகிறது.

இதற்கு அடிப்படை காரணமாக உள்ள அலுவலக உதவியாளரை இடமாற்றம் செய்யவும், எங்களுக்கு உடனடியாக தொகைகள் கிடைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை எங்கள் உயர் அதிகாரிகள் செய்யும் வரை, இந்த முற்றுகை தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

உதவி தொடக்கல்வி அலுவலர் சிவசுப்பிரமணியம் கூறுகையில், "அனைத்து ஆசிரியர்களின் கோப்புகளிலும் கையொப்பமிட்டு, 2013 டிசம்பர் மாத தொடக்கத்திலேயே அனுப்பப்பட்டு விட்டது. இதில் உரிய ஆவணங்கள், சான்று சீட்டுகள் இல்லாத ஆசிரியர்களின் கோப்புகளை மட்டும் மறு தணிக்கைக்காக திருப்பி அனுப்பி உள்ளனர். எனக்கு உடல்நிலை சரியில்லாத சூழ்நிலையிலும், இந்த கோப்புகளை சரிபார்த்து வருகிறேன்" என்றார்.

மூன்று மணிநேரத்துக்கும் மேல், முற்றுகை தொடர்ந்த நிலையில், உடுமலை உதவி தொடக்க கல்வி அலுவலர் மனோகரன் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அரை மணிநேரத்துக்கு பின், இந்த பிரச்னைக்கு காரணமாக கூறப்படும் மயூரிநாதன் என்பவரை இடமாற்றம் செய்ய உறுதி வழங்கியதையடுத்து, ஆசிரியர்கள் கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment