தனியார் பள்ளிகள், மாணவர் சேர்க்கை நடத்திட, அவர்களுக்கு, நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது. மீறி, நுழைவுத் தேர்வு நடத்தினால், சம்பந்தபட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்து உள்ளது. இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில்
(ஆர்.டி.இ.,), பள்ளிகளுக்கான விதிமுறைகள் குறித்து, பல தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
இந்த விதிமுறைகளை, பள்ளிகள் கடைபிடிப்பது இல்லை. வழக்கமான பாணியில் தான், தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றை, அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. "ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியரை, எந்தக் காரணம் கொண்டும், தோல்வி அடையச் செய்யக்கூடாது; மாணவர் சேர்க்கைக்கு, நுழைவுத்தேர்வு நடத்தக்கூடாது' என்பது முக்கியமான விதிகள். ஆனால், இதை, இரண்டையும், பள்ளிகள் கடைபிடிப்பது இல்லை. தமிழகத்தில், பல முன்னணி தனியார் பள்ளிகளில், இப்போதும், எல்.கே.ஜி., அல்லது முதல் வகுப்பு சேர்க்கைக்கு, நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. வேறு வகுப்புகளில் சேர்த்தாலும், தேர்வு நடத்தி தான், "சீட்' தருகின்றனர். இதேபோல், படிப்பில், மிகவும் பின் தங்கும் குழந்தைகளை, "பெயில்' செய்கின்றனர். இந்த விவகாரமும், வெளியில் தெரிவது இல்லை.
இந்நிலையில், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம், "மாணவர் சேர்க்கைக்கு, நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது. மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்துள்ளது.
வெற்று அறிவிப்புடன் நிற்காமல், அறிவிப்பு, அமல்படுத்தப்படுகிறதா என்பதை, நேரடியாக, களத்திற்கு சென்று ஆய்வு செய்து, விதிமுறையை மீறும் பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுக்க, துறை முன்வர வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment