தமிழக அரசு துறைகளில் அதிகமான குழப்பங்கள் காணப்படுவதும், அதிகமான வழக்குகளை சந்திப்பதும் பள்ளி கல்வி துறையாகவே இருக்கும். சமச்சீர் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் போது இருந்த அதே அதிகாரியே, ஆட்சி மாறியதும் அந்த கல்வி திட்டம் சரியல்ல என்று உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்தார். அதுதான் முதல் கோணல். அதன்பின், ஆசிரியர் நியமனம் உள்பட பல்வேறு விஷயங்களிலும் குழப்பங்கள் நீடிக்கிறது. இந்த சூழ்நிலையில், பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு கடந்த ஆண்டில் தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. இதில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களையும் சேர்த்து புதிதாக வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிட்டு, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இப்போதைய காலகட்டத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு கூட, இன்டர்நெட் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அனைத்து வசதிகளும் கிடைத்து விடுகின்றன. அதனால், கிராமப்புற மாணவர்களும் பொது தேர்வுகளில் சர்வசாதாரணமாக 90 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்று விடுகிறார்கள். ஆனால், அந்த காலத்தில் அதிகமாக போராடி 60 சதவீத மதிப்பெண் பெற்றவர்களுக்கு அதனடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண் கொடுத்து வேலை நியமனம் செய்வது அவர்களை மிகவும் பாதிக்கிறது. இது ஒரு வகையில் அவர்களை நிராகரிப்பதற்கு சமமாகிறது. இது நியாயமற்றது. இதனால், பாதிக்கப்பட்டிருக்கும் ஆசிரியர்கள் கடந்த 15 நாட்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன் தினம் கவன ஈர்ப்பு பேரணி நடத்திய போது, கடும் மன உளைச்சலில் இருந்த 4 பேர் பூச்சி கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதன்பின்பும், கல்வி துறையினர் இந்த விஷயத்தை பற்றி கவலைப்படாமல் அமைதி காப்பது சரியாக இருக்காது. மாணவர்களை நல்வழிப்படுத்தி வருங்கால சமுதாயத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள். அவர்களுக்கு எந்த ஒரு அரசும் எப்போதும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயங்களை ஆய்வு செய்ய அரசு முன் வர வேண்டும். அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்வதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எனவே, போராட்டம் நடத்தும் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும்.
No comments:
Post a Comment