Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 28 March 2014

துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

 இடைநிலை ஆசிரியர்கள்

1. 004 - Deputy Inspectors Test-First Paper
(Relating to Secondary and Special Schools) (without books)

2. 017 - Deputy Inspector’s Test--Second Paper
(Relating to Elementary Schools) (Without Books)

3. 119 - Deputy Inspector’s Test
Educational Statistics (With Books).


4 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).

5 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With Books).

பட்டதாரி ஆசிரியர்கள்

1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).

2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With Books).

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்

1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).

2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
(Previously the District Office Manual--Two Parts) (With Books).

மாவட்டக்கல்வி அலுவலர்

1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
114 The Account Test for Executive Officers (With Books).

2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test

(Previously the District Office Manual--Two Parts) (With Books).

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10%அகவிலைப்படி உயர்வுக்கான மத்திய அரசின் ஆணை


வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்வு எப்படி?

* வாக்குச்சாவடி முதன்மை அலுவலர்-தரஊதியம் ரூ4600க்கு மேல்...

* வாக்குச்சாவடி அலுவலர் 1- தரஊதியம் ரூ 2800முதல் ரூ 4800.


* வாக்குச்சாவடி அலுவலர் 2 & 3- தரஊதியம் ரூ 1800 முதல் 2800 வரை.

பள்ளி மற்றும் உதவித்தொடக்கக்கல்வி அலுவலகங்களில் தகவல் பலகையில் எழுதி வைக்கவேண்டிய விவரங்கள் குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் உத்திரவு

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் சேர்க்கை தொடர்பான அரசாணையை எதிர்த்து வழக்கு ஒரு வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் சேர்ப்பது தொடர்பான அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிற்கு ஒரு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், விருகம்பாக்கத்தை சேர்ந்த ஏ.நாராயணன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
குறைவான கால அவகாசம்
மத்திய அரசு, கடந்த 2009–ம் ஆண்டு கட்டாய கல்வி உரிமை சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி, அனைத்து தனியார் பள்ளிகளிலும், 25 சதவீத இடங்கள் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும்.
இதன்படி, தனியார் பள்ளிகளில் மாணவர்கள் விண்ணப்பம் செய்வது குறித்து கடந்த 2013–ம் ஆண்டு ஏப்ரல் 1–ந் தேதி தமிழக அரசு ஒரு அரசாணையை வெளியிட்டது. அதில், ஒவ்வொரு ஆண்டும் மே 3–ந் தேதியில் இருந்து 9 –ந் தேதிக்குள் (7 நாட்களுக்குள்) விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் வழங்கி விட வேண்டும் என்று கூறியிருந்தது.
இந்த 7 நாட்கள் கால அவகாசம் என்பது மிகவும் குறைவானதாகும். இதில், சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளை கழித்தால், 5 நாட்கள் மட்டுமே மீதம் இருக்கும்.
பதிலளிக்க வில்லை
இந்த 5 நாட்களில், பள்ளிக்கூடத்தில் இருந்து விண்ணப்பத்தை பெற்று, அவற்றை பூர்த்தி செய்து, திருப்பிக் கொடுப்பது என்பது மிகவும் கடினமானது என்பதால், இந்த கால அவகாசத்தை அதிகரிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு இந்த ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.
அந்த வழக்கிற்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டும், இதுவரை பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை.
கர்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில், இந்த 25 சதவீத இடங்களுக்கு, விண்ணப்பம் செய்ய ஒரு மாதத்துக்கு மேல் கால அவகாசம் வழங்கப்படுகிறது. தமிழக அரசு குறுகிய கால அவகாசம் வழங்கியுள்ளதால், கடந்த ஆண்டு தகுதிகள் இருந்தும் பல மாணவர்கள், இந்த இடஒதுக்கீட்டின் கீழ் பள்ளியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இறுதி வாய்ப்பு
இந்த 25 சதவீத இடங்களை வேறு மாணவர்களை கொண்டு பள்ளிகள் நிரப்பிக் கொண்டது. எனவே இந்த வழக்கு முடியும் வரை, ஏழை மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவீத இடங்களை, தனியார் பள்ளிகள் நிரப்புவதற்கு தடை விதிக்க வேண்டும். நான் தொடர்ந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் கடந்த ஆண்டு தொடர்ந்த வழக்கிற்குள், தமிழக அரசு ஒரு வாரத்துக்குள் பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். இதுவே தமிழக அரசுக்கு வழங்கப்படும் இறுதி வாய்ப்பாகும் என்று கூறி வழக்கை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு: அரசுக்கு இறுதி வாய்ப்பு

பின் தங்கிய மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிப்பவர்களுக்கு, கால அவகாசத்தை நீடிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் மனுத் தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இறுதி வாய்ப்பு வழங்கியுள்ளது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கும் பெற்றோர்களுக்காக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக ஏ.நாராயணன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படியும், உச்ச நீதிமன்ற உத்தரவுப் படியும், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் உள்ள இடங்களில் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி அரசு வெளியிட்ட ஆணையில், தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவீத இடத்துக்கு விண்ணப்பிக்கும் பெற்றோர்கள் ஆண்டுதோறும் மே மாதம் 3 முதல் 9-ஆம் தேதி வரை, காலை 9 முதல் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த 7 நாள்களில் 2 நாள்கள் வார இறுதியாக அமைந்து விடுகின்றன. மீதம் உள்ள 5 நாள்களில் பின்தங்கியுள்ள, படிப்பறிவில்லாத பெற்றோர்கள் எவ்வாறு விண்ணப்பிக்க முடியும்? இதர மாநிலங்களில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் சிறப்பாக நடைமுறைப்படுத்துகின்றன.
குறிப்பாக கர்நாடகத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் விண்ணப்பிப்பதற்கு, ஜனவரி மாதம் 7-ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி வரையும், தொடர்ச்சியாக பிப்ரவரி 19-ஆம் தேதி வரையும் அவகாசம் வழங்கப்படுகிறது. ஒதுக்கப்பட்ட 25 சதவீத இடங்கள் நிரம்பவில்லை என்றால் மார்ச் 15-ஆம் தேதி வரை கூடுதலாக கால அவகாசம் வழங்குகின்றனர்.
தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகளை நடமுறைப்படுத்துவதைப் பற்றி அரசு கண்டு கொள்வதில்லை. தமிழகத்தில் 69 சதவீத தகுதி உள்ள குழந்தைகள் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் கல்வி பெற வாய்ப்புகள் இருந்தும், அரசின் இடைக்கால உத்தரவால் கடந்த கல்வி ஆண்டில் அவர்கள் கல்வி வாய்ப்பை இழந்து விட்டனர்.
இது தொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அதற்கு பதில் அளிக்குமாறு அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், இதுவரை தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை. எனவே, என் பிரதான மனு மீது தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை (மார்ச் 27) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசுக்கு இறுதி வாய்ப்பாக ஒரு வாரம் அவகாசம் வழங்கப்படுகிறது. அதற்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

ஏப்ரல் இறுதியில் 10-ஆம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு?

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு குறுக்கிடுவதையடுத்து, பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் இறுதியில் நடைபெறும் எனத் தெரிகிறது.
விடைத்தாள் மதிப்பீட்டில் இந்த ஆண்டு 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நாளொன்றுக்கு இவர்கள் 30 விடைத்தாள்களை மதிப்பீடு செய்தால் 4 நாள்களில் மதிப்பீடு செய்து முடித்து விடலாம் என தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறியது:
பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் அந்தந்த மதிப்பீட்டு மையங்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் எடுத்துச் செல்லப்பட உள்ளன. பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு பெரும்பாலும் ஏப்ரல் 14, 15-ஆம் தேதிகளில் நிறைவடையும். அதன் பிறகு இரண்டு நாள்கள் கழித்தே இந்த மதிப்பீட்டு முகாம்களில் பணிகள் முடிவடையும்.
பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களுக்கான பூர்வாங்கப் பணிகள் 2 அல்லது 3 நாள்களுக்கு நடைபெறும். எனவே, ஏப்ரல் 20-தேதிக்குப் பிறகு மதிப்பீட்டுப் பணிகள் நடைபெற வாய்ப்புள்ளது.
ஏப்ரல் 24-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், அதற்கு முன்னதாக ஒரு நாளும், இடையில் பயிற்சிக்காகவும் ஆசிரியர்கள் செல்ல வேண்டியிருக்கும். பயிற்சிக்குச் செல்லும் தேதிகளை தேர்தல் ஆணையத்திடம் இருந்து கேட்டுள்ளோம். கிடைத்ததும் பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்கான தேதிகள் இறுதி செய்யப்படும். விடைத்தாள் மதிப்பீட்டை ஏப்ரல் 26-க்குப் பிறகு தொடங்கினால் கூட, மே 1-ஆம் தேதிக்குள் முடித்துவிடலாம். இந்தப் பணியில் ஒரு பள்ளிக்கு 5 ஆசிரியர்கள் வீதம் 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

மறதி நோயால் மாணவர்கள் பாதிப்பு கூடுதல் நேரம் ஒதுக்கி உத்தரவு


தர்மபுரி மாவட்டத்தில், மறதி நோயால் பாதிக்கப்பட்ட, 56 மாணவர்களுக்கு, எஸ்.எஸ். எல்.ஸி., தேர்வில் கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கி, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வு நேற்று முன்தினம் துவங்கியது. வரும், 9ம் தேதி வரை தேர்வு நடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில், 69 மையங்களில், 27 ஆயிரத்து, 606 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு எழுதுகின்றனர். மாவட்டத்தில், ஆறு இடங்களில், பத்து வினாத்தாள்கள் கட்டுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 20 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் சொல்வதை எழுதிட, 26 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில், தர்மபுரி மாவட்டத்தில், மறதி நோயால் பாதிக்கப்பட்ட, 56 மாணவர்களுக்கு, கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து, சி.இ.ஓ., மகேஸ்வரி கூறியதாவது:
தர்மபுரி மாவட்டத்தில் பயிலும், எஸ்.எஸ்.எல்.ஸி., மாணவ, மாணவிகளில், தேர்வுக்கு முன்னதாகவே, டிஸ்லெக்சியா எனப்படும் மறதி நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்னர். அவர்களுக்கு, கூடுதலாக ஒரு மணி நேரம் தேர்வு எழுத கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது, என்றனர்.

10ம் வகுப்பு தேர்வு எழுத அனுமதி மறுப்பு :மாணவர்கள் மீண்டும் புகார்


சிவகங்கை தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு மாணவர்களிடம் வலுக்கட்டாயமாக கடிதம் பெற்று, தேர்வு எழுத தடை விதிப்பதாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை வாரச்சந்தை ரோட்டில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில், நேற்று முன்தினம் 10ம் வகுப்பு தேர்வு எழுத வந்த சுதாகர், மணிகண்ட பிரபு, நவீன்குமார், நவநீதகிருஷ்ணன், சுரேஷ், தினேஷ், ஆனந்தகுமார், அரவிந்த்குமார், பாலமுருகன் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
முதன்மைக்கல்வி அலுவலர் செந்திவேல் முருகன் விசாரித்தபோது, "ஒன்பது பேரையும் தேர்வு எழுத, பள்ளி நிர்வாகமே அனுமதிக்கவில்லை. அவர்கள் பெயரை தேர்வுத்துறைக்கு அனுப்பவில்லை' என தெரிந்தது.
கலெக்டர் ராஜாராமன், முதன்மைக்கல்வி அலுவலர் நடவடிக்கையால் ஆறு பேர் மட்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
மற்ற மூன்று மாணவர்களும், நேற்று காலை, தமிழ் 2ம் தாள் தேர்வு எழுதச் சென்றபோது, கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கவில்லை. மூவரும் முதன்மைக்கல்வி அலுவலரிடம் புகார் 
செய்தனர்.
இந்நிலையில், அதே பள்ளி மாணவர்கள் அர்ச்சுனன், கதிரவன் ஆகியோர், "எங்களை ஆங்கிலம், கணக்கு தேர்வை எழுதவிடாமல் பள்ளி நிர்வாகம் கடிதம் எழுதி வாங்கியுள்ளது' என, முதன்மைக்கல்வி அலுவலரிடம், நேற்று புகார் செய்தனர்.
அர்ச்சுனன் கூறுகையில், ""ஆங்கிலத்தில் சுமாராக படிப்பதால், "அடுத்தமுறை தேர்வு எழுத சம்மதிக்கிறேன்' என, என்னிடம் வற்புறுத்தி, பள்ளி நிர்வாகத்தினர் கடிதம் வாங்கினர். வேறு வழியின்றி எழுதி கொடுத்தேன்,'' என்றார்.
கதிரவன் கூறுகையில், ""கணக்குப் பாடத்தில் தோல்வி அடைவேன் என, அவர்களாகவே கருதி என்னிடம் எழுதி வாங்கினர்,'' என்றார்.
இவர்கள் இருவரும், தமிழ் முதல் தாள் தேர்வு எழுதியுள்ளனர்.

வெயில் தாக்கம் அதிகரிப்பு துவக்கப்பள்ளிகளில் நேரத்தை மாற்ற ஆசிரியர்கள் கோரிக்கை


வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால், அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் வேலைநேரத்தை, குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில், கோடை காரணமாக, நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பல இடங்களில், நிலத்தடி நீர்மட்டம் காணாமல் போய் விட்டதால், தண்ணீர் பஞ்சமும் தலைதூக்கி வருகிறது. இந்நிலையில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும், தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இறுதி தேர்வுகள் நடந்து வருகிறது.

துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, 220 நாட்கள் வேலைநாட்களாக அரசாணை உள்ளதால், ஏப்ரல் மாதம், 30ம் தேதி வரை பள்ளிகள் செயல்பட வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்வின் நேரத்தை, வெயில் காரணமாக மாற்றியுள்ள நிலையில், துவக்கப்பள்ளி செயல்படும் நேரத்தையும் மாற்றியமைக்க வேண்டும், என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து அரசு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், மாணவர்கள் பல அவதிகளுக்கு உள்ளாகின்றனர். பெரும்பாலான துவக்கப்பள்ளிகளில் மின் விசிறி மற்றும் மின்சாரம் உள்ளிட்டவை இருப்பதில்லை. இதனால், துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் வேலை நேரத்தை காலை, 8.30 மணி முதல் மதியம், 1 மணி வரையாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், முன்னதாகவே தேர்வு நடத்தி அனைத்து பள்ளிகளை போலவும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் விடுமுறை அளிக்க முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு தமிழ் இரண்டாம் தாள் 777 பேர் ஆப்சென்ட்


திருச்சி மாவட்டத்தில் நேற்று நடந்த எஸ்.எஸ்.எல்.ஸி., தமிழ் இரண்டாம் தாள் தேர்வு எழுத 777 பேர் வரவில்லை.
2013-14ம் கல்வி ஆண்டிற்கான எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத் தேர்வு நேற்று முன் தினம் துவங்கியது. முதல் நாள் தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. இதில், திருச்சி மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்களில் 781 பேர் தேர்வு எழுத வரவில்லை.
இரண்டாம் நாளான நேற்று, தமிழ் இரண்டாம் தாள் தேர்வு எழுத திருச்சி மாவட்டத்தில் 399 பள்ளிகளில் பயிலும், 20,552 மாணவர்கள், 19,892 மாணவிகள் என மொத்தம் 40,444 பேரும், தனித் தேர்வர்கள் 1,369 என மொத்தம் 41,813 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்தனர்.
திருச்சி மாவட்டம் முழுவதும் 137 தேர்வு மையம், தனித் தேர்வர்களுக்கு 13 மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வு முறைகேடுகளை கண்காணிக்க 3 மாவட்ட கல்வி அதிகாரிகள் தலைமையில், 150 பேர் கொண்ட பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். விண்ணப்பத்தவர்களில் 41, 036 பேர் தேர்வு எழுதினர். 777 பேர் தேர்வு எழுத வரவில்லை.
திருச்சி மத்திய சிறையில் 64 கைதிகள் நேற்று தேர்வு எழுதினர். அடுத்து ஆங்கிலம் முதல் தாள் தேர்வு ஏப்ரல், 1ம் தேதி நடக்கிறது. 

தமிழ் முதல் தாள் தேர்வில் சர்ச்சை கேள்வி தேர்வுத்துறையிடம், இந்து முன்னணி புகார்


நேற்று முன்தினம் நடந்த, ௧௦ம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வில், சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி கேட்டிருப்பது குறித்து, இந்து முன்னணி நிர்வாகிகள், நேற்று, தேர்வுத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஒரு மதிப்பெண் பகுதியில், ஐந்தாவது கேள்வியாக, 'பகைவனிடமும் அன்பு காட்டு என, கூறிய நுால் எது' என்று கேட்டு, அதற்கு, 'ஆப்ஷன்' விடைகளாக, 'பகவத் கீதை, நன்னுால், பைபிள்' ஆகியவை தரப்பட்டன. பாடத் திட்டத்தின்படி, 'பைபிள்' என்பது சரியான விடை. இந்நிலையில், இந்த கேள்வியும், விடைகளும் சர்ச்சைக்குரியவை என, தெரிவித்து, இந்து முன்னணி, சென்னை மாநகர பொதுச் செயலர், இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள், நேற்று, தேர்வுத்துறை அதிகாரிகளிடம், புகார் தெரிவித்தனர். மதத்திணிப்பு? தேர்வுத்துறை இணை இயக்குனர், ராமராஜுடம், அவர்கள் அளித்த புகார் மனு:
பள்ளி பாடத் திட்டங்களில், தி.மு.க., கொள்கை, நாத்திக கருத்துகள், மத கருத்துகள், வலிந்து திணிக்கப்படுகின்றன. பைபிள் பற்றி மாணவர்கள் மத்தியில், தாக்கத்தை ஏற்படுத்தவே, இந்த கேள்வியை கேட்டுள்ளதாக கருதுகிறோம்.

கேள்வியை அமைத்தவர், வேண்டும் என்றே, பகவத் கீதையை சேர்த்துள்ளார். மத திணிப்பை நோக்கமாகக் கொண்ட, இந்த கேள்வியை தயாரித்த ஆசிரியர் குழு மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் காலங்களில், இது போன்ற சர்ச்சைகள் ஏற்படாத அளவிற்கு, பாடத் திட்டங்கள் இருக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
நிருபர்களிடம் பேசிய இளங்கோவன், ''கேள்வி, மாணவர்களை குழப்பும் வகையில் உள்ளது. எனவே, அனைத்து மாணவர்களுக்கும், ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும். கேள்வியை தயாரித்த ஆசிரியர் குழு மீது, கல்வித்துறை 
நடவடிக்கை எடுக்காவிட்டால், கல்வித்துறை அலுவலகம் முன் போராட்டம் நடத்துவோம்,'' என்றார்.

'தவறில்லை'

தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் கூறியதாவது:
தமிழ் பாடப் புத்தகம், பக்கம், 182ல், 'காந்தி, ஒரு முறை இயேசுநாதரின், மலைசொற்பொழிவு பற்றிய நுாலை படித்தார். தீயவனை எதிர்க்காதே; 
அவனிடம் உள்ள தீமையை எதிர்த்து நில்; பகைவனிடமும் அன்பு பாராட்டு எனும் கருத்துகள், அவரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தின. பகவத் கீதையை படித்ததன் மூலம், மன உறுதியை பெற்றார்' என, வருகிறது.
இதன் அடிப்படையில், 185ம் பக்கத்தில் உள்ள மாதிரி வினாக்களில், இந்த கேள்வி கேட்கப்பட்டு உள்ளது. பாடத் திட்டத்தின்படி, கேள்வியிலும், விடையிலும் தவறு இல்லை. எனவே, இதற்கு, கருணை மதிப்பெண் வழங்க வாய்ப்பு இல்லை. இந்த பிரச்னை குறித்து, தமிழக அரசுக்கு, அறிக்கை அனுப்புவோம்.
இவ்வாறு, தேவராஜன் தெரிவித்தார்.

பிளஸ் 2 தேர்வுக்கு, தடையில்லாமல் மின் வினியோகம் வழங்கியது போல், 10ம் வகுப்பு தேர்வுக்கும் வழங்கப் படுமா?


பிளஸ் 2 தேர்வுக்கு, தடையில்லாமல் மின் வினியோகம் வழங்கியது போல், 10ம் வகுப்பு தேர்வுக்கும் வழங்கப் படுமா என்ற சந்தேகம், மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக, அதிகளவில், மின் பற்றாக்குறை இருந்ததால், பள்ளி பொதுத்தேர்வு என்று கூட பார்க்காமல், கடந்த ஆண்டு வரை, மின்தடை செய்யப்பட்டது. மாணவர்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக, பல மையங்களில், ஜெனரேட்டர் உதவியுடன், மின் வினியோகம் செய்யப்பட்டது. புதிய அனல்மின் நிலையங்களில் கூடுதல் மின்சாரம் கிடைத்தாலும், நடப்பாண்டிலும், மின் பற்றாக்குறை இருந்ததால், தேர்வு மையங்களில், மின்தடை செய்யப்படுமா என்ற சந்தேகம் இருந்தது. "தேர்வு துவங்குவதற்கு முன், இரண்டு மணி நேரம் தேர்வுக்கு பின், இரண்டு மணி நேரம் என, தேர்வு மையங்களுக்கு தடையில்லாமல் மின்சாரம் வினியோகிக்க வேண்டும்' என, அதிகாரிகள் திட்டமிட்டனர். அதற்காக, தேர்வு நேரங்களில், நீர்மின் நிலையங்களில் மின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டனர். இதனால், மின் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், குடியிருப்புகளுக்கு செல்லும், "பீடர்'களில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டு, பள்ளிகளுக்கு செல்லும், "பீடர்'களில், தடையில்லாமல் மின் வினியோகம் செய்தனர். எனவே, பிளஸ் 2 தேர்வு நடந்த எந்த மையத்திலும், மின்தடை பிரச்னை எழவில்லை. இந்த சூழ்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, நேற்று துவங்கியுள்ளது. இந்த தேர்வை, 10.38 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். பிளஸ் 2 தேர்வுக்கு, தடையில்லாமல் மின்சாரம் வழங்கியது போல், 10ம் வகுப்பு தேர்வுக்கும் வழங்கப்படுமா அல்லது மின்தடை செய்யப்படுமா என்ற சந்தேகம், மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பெரிய வெற்றி : இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த காலங்களில், தேர்வு மையங்களில், மின்தடை ஏற்பட்டது போல், இந்த ஆண்டு நடக்கக் கூடாது என்பதில், கவனமாக இருந்தோம்; இதற்காக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனால், தேர்வு மையங்களில், மின்தடை பிரச்னை என்று, எங்கிருந்தும் தகவல் வரவில்லை; இதை, பெரிய வெற்றியாக கருதுகிறோம். பிளஸ் 2 தேர்வு போலவே, 10ம் வகுப்பு தேர்வு மையங்கள், விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு, தடையில்லாமல் மின் வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி : தேர்தலுக்கு பின் துவங்கி 5 நாட்களில் முடிகிறது


தமிழகத்தில், லோக்சபா தேர்தல் முடிந்த பின், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கும்' என, தேர்வுத் துறை வட்டாரம், நேற்று தெரிவித்துள்ளது. 60 ஆயிரம் ஆசிரியர்கள் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: பத்து லட்சம் மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு தேர்வை எழுதுகின்றனர். ஒரு மாணவருக்கு, ஏழு தேர்வுகள் வீதம், 70 லட்சம் விடைத்தாள்களை திருத்த வேண்டி உள்ளது. தமிழகத்தில், 12 ஆயிரம் பள்ளிகளில் இருந்து, பாட வாரியாக, ஐந்து ஆசிரியர்கள் வீதம், 60 ஆயிரம் ஆசிரியர்களை, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்த உள்ளோம். ஒரு ஆசிரியர், நாள் ஒன்றுக்கு, 30 விடைத்தாள் திருத்துவார். அதன்படி, ஒரு நாளில், 18 லட்சம் விடைத்தாள்களை திருத்த முடியும். அதிகபட்சமாக, ஐந்து நாளுக்குள், விடைத்தாள் திருத்தும் பணியை முடிப்போம். தேர்தல் பணி பயிற்சி வகுப்பில், ஆசிரியர் பங்கேற்க இருப்பதால், தேர்தலுக்குப் பின், பணியை துவக்கி, ஏப்ரல் இறுதிக்குள் முடித்து விடுவோம்.
இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய பாணி : வழக்கமாக, விடைத்தாள் திருத்தும் பணி, 15 அல்லது 20 நாள் என, இழுவையாக நடக்கும். ஆனால், இந்த ஆண்டு, விடைத்தாள் திருத்தும் பணியை, விரைந்து முடிக்க, அதிக ஆசிரியர்களை, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தி, இயக்குனர் நடவடிக்கை எடுத்து உள்ளார்.
இதனால், தேர்வு முடிவும், விரைவில் வெளிவர வாய்ப்பு உள்ளது. தேர்வு மையங்களில் இருந்து, விடைத்தாள்களை திருத்தும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில், முன்னணி தனியார் பார்சல் நிறுவன வாகனங்களை, தேர்வுத்துறை ஈடுபடுத்தி வருகிறது. "கடந்த ஆண்டு, இந்த பணிக்காக, 2.8 கோடி ரூபாயை, அஞ்சல் துறைக்கு, தேர்வுத்துறை வழங்கியது. தற்போது, தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தப்படுவதால், இந்த ஆண்டு செலவு குறையும்' என, தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.