வரும் கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்புகள் ஜூன் 16-ஆம் தேதி தொடங்கப்படும்; மீதமுள்ள வகுப்புகளுக்கு ஜூன் 2-ஆம் தேதி பள்ளி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
10-ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 26 முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது. தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
தேர்வுகள் நிறைவடைந்தன: பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 6, 7, 8, 9 ஆகிய வகுப்புகளுக்கான தேர்வுகள் புதன்கிழமையோடு நிறைவடைந்தன. ஓரிரு மாவட்டங்களில் ஆசிரியர்களுக்கான தேர்தல் பயிற்சித் தேதிகளும், தேர்வு தேதிகளும் குறுக்கிட்டுள்ளன.
இதனால், இந்த மாவட்டங்களில் மட்டும் வியாழக்கிழமையும் தேர்வு நடைபெறும். தேர்வுகள் முடிவடைந்தாலும், பள்ளிகள் ஏப்ரல் 22-ஆம் தேதி வரை செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து, வழக்கமாக ஏப்ரல் இறுதி வாரத்தில் நடைபெறும் பள்ளி ஆண்டுத் தேர்வுகள் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே முடிக்க பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டது.
அதனடிப்படையில் ஏப்ரல் 3-ஆம் தேதி முதல் ஏப்ரல் 16-ஆம் தேதி தேர்வுகள் நடைபெற்றன. இந்தப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 23 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
தொடக்கக் கல்வித் துறை: தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை செயல்பட உள்ளன.
இந்தப் பள்ளிகளில் தேர்வுகள் அடுத்த வாரத்தில் தொடங்குகின்றன. வாக்குப்பதிவு தினத்தையடுத்து, ஏப்ரல் 23, 24, 25 ஆகிய தினங்கள் இந்தப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் 5 முதல் 8-ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவத் தேர்வுகள் ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்குகின்றன. ஏப்ரல் 22, 26, 28, 29 ஆகிய தேதிகளில் இந்தத் தேர்வுகள் நடைபெறுகின்றன.
1 முதல் 4-ஆம் வகுப்பு வரை செயல்வழிக் கற்றல் முறை அமலில் உள்ளதால் அந்த மாணவர்கள் மூன்றாம் பருவத் தேர்வை எழுதுவது அவசியம் இல்லை. இந்தப் பள்ளிகளுக்கு மே 1 முதல் கோடைகால விடுமுறை விடப்படுகிறது.
No comments:
Post a Comment