சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு காண வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தினரின், குடும்பத்தினர் ஒரு லட்சம் பேர், லோக்சபா தேர்தலில், 'நோட்டா'விற்கு ஓட்டு போட முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில், ஐந்தாவது சம்பள கமிஷன் அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களின் அடிப்படை சம்பளம் 6,750 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்களுக்கு 9,000 ரூபாயாகவும், முதுகலை ஆசிரியர்களுக்கு 10,500 ரூபாயாகவும் இருந்தது.இதன்பின் அமல்படுத்தப்பட்ட ஆறாவது சம்பள கமிஷனில், இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை சம்பளம், 5,200 ரூபாயாகக் குறைக்கப்பட்டது. பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் சம்பளம், உரிய விகிதத்தில் அதிகரிக்கப்பட்டது. இதற்கு, இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்ததாக, அப்போது காரணம் கூறப்பட்டது.
ஆனால், தி.மு.க., ஆட்சியின் போது, மாநில அரசை எதிர்த்து, கோர்ட்டிற்கு சென்ற இடைநிலை ஆசிரியர்கள், 'மாநில மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்' என்ற கோர்ட் உத்தரவு பெற்றதற்காக, பழிவாங்கும் நோக்கில் சம்பளத்தில், 'கை' வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது.இதில், 7,000 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், இதுவரை அவர்கள் கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படவில்லை. பின், அ.தி.மு.க., ஆட்சியின் போது, ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற, 9,564 இடைநிலை ஆசிரியர்கள், 2012ல் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கும், 5,200 என்று தான் அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னையில், தமிழகம் முழுவதும் மொத்தம், 17 ஆயிரம் ஆசிரியர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தான் வரும் தேர்தலில், 'நோட்டோ'விற்கு (யாருக்கும் ஓட்டளிக்கவில்லை) ஓட்டளிக்க முடிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment