திருவள்ளூர் மாவட்டத்தில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளின் வினாத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் தராமல் அலைக்கழித்தால் ஆசிரியர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வந்தது.
இதில் ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 வினாத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 500 ஆசிரியர்கள் சுழற்சி முறையில் ஈடுபட்டனர். இதில் ஒருவருக்கு 5 நாள்கள் பணி நாளாக இருந்தது.
இதற்கான ஊதியம் 22-ஆம் தேதி வழங்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் 22-ஆம் தேதி ஆசிரியர்கள் அனைவரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்த அந்தந்த பகுதி வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்பட்டனர். இதையடுத்து தேர்தல் பணி முடிந்து ஊதியம் பெறுவதற்காக, வினாத்தாள் திருத்தும் பணி நடைபெற்ற மையத்துக்கு வந்தனர். ஆனால் அங்கு காலை முதல் பிற்பகல் வரை அமர வைத்து கணினி பழுது என கூறியுள்ளனர். இதனால் ஆசிரியர்கள் கோபமடைந்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கூச்சலிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சந்திரசேகர் அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தினார். அதன் பின்னர் மாலை 5 மணியளவில் ஊதியம் வழங்கப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment