Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 25 April 2014

பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு: சுப்ரீம் கோர்ட் முடிவால் ஏற்பட்டது திருப்பம்

புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரத்தை மீண்டும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு (ஏ.ஐ.சி.டி.இ.,) சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ளது. இதனால், இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
நாடு முழுவதும், 13 ஆயிரம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகள், பல்கலைகள் உள்ளன. இக்கல்லூரிகளுக்கான அனுமதி வழங்கும் அமைப்பாக ஏ.ஐ.சி.டி.இ. செயல்பட்டது. அதே நேரத்தில் பொறியியல், தொழில்நுட்பம் மட்டுமின்றி அனைத்து கலை அறிவியல் கல்லூரிகள், பல்கலைகளை கட்டுப்படுத்தும் அமைப்பாக பல்கலை மானிய குழு (யு.ஜி.சி.,) செயல்படுகிறது.
அதிர்ச்சி
இந்நிலையில், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரத்தை யு.ஜி.சி.,யிடம் சுப்ரீம் கோர்ட் வழங்கியது. தொடர்ந்து கல்லூரி, பல்கலைகளுக்கு விதிமுறைகளை யு.ஜி.சி., வகுத்தது. ஓராண்டிற்கு புதிய கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க தடை விதித்தது. புதிய கல்லூரிகளை துவக்க அனுமதி கேட்ட பலர், இந்த தடையால் அதிர்ச்சி அடைந்தனர்; தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட் யு.ஜி.சி. தடைக்கு இடைக்கால தடை விதித்தது.
2 லட்சம் இடங்கள்
மேலும், புதிய கல்லூரிக்கு அனுமதியளிக்கும் அதிகாரத்தை மீண்டும் ஏ.ஐ.சி.டி.இ.க்கு சுப்ரீம் கோர்ட் வழங்கி உள்ளது. இதையடுத்து, புதிய கல்லூரி துவக்க அனுமதி கேட்டு பல அறக்கட்டளைகள் ஏ.ஐ.சி.டி.இ., அமைப்பை நாடியுள்ளன. தமிழகத்தில், ஏற்கனவே 500 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் இருந்து ஆண்டுக்கு இரண்டு லட்சம் பொறியியல் இடங்கள் கவுன்சிலிங்கிற்கு அளிக்கப்படுகின்றன. தமிழகத்தில் ஏற்கனவே புதிய கல்லூரிகள் துவக்குவதற்கான விண்ணப்பங்களை அண்ணா பல்கலை கோரியது; ஆனால் யாரும் விண்ணப்பிக்கவில்லை. இதற்கான அனுமதி அளிக்கும் அதிகாரம் யு.ஜி.சி.,யிடம் இருந்ததே இதற்கு காரணம் என அப்போது கூறப்பட்டது.
அதிகரிக்க வாய்ப்பு
தற்போது, ஏ.ஐ.சி.டி.இ.,யிடம் அனுமதி அளிக்கும் அதிகாரம் வந்துள்ளதால், புதிய கல்லூரிகள் துவக்க விண்ணப்பிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் பொறியியல் இடங்கள் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதே நேரம் மாணவ, மாணவியர் ஆர்வம் குறைந்துள்ளதால் ஆண்டு தோறும் 70 ஆயிரம் பொறியியல் இடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன. புதிய இடங்களையும் சேர்த்தால் நிரப்பப்படாத இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
கல்லூரிகள் திறப்பு தாமதமாகுமா?
"பொறியியல் கவுன்சிலிங்கை, ஜூலை 30க்குள் முடித்து ஆகஸ்ட் 1ல் வகுப்புகள் துவக்கப்பட வேண்டும்" என, சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. புதிய கல்லூரிக்கான விண்ணப்பத்தை பரிசீலிக்கும் பணி மே இறுதிக்குள் முடிய வாய்ப்பில்லை என்பதால், கல்லூரிகளை திறக்கும் தேதியை நீட்டிப்பதற்கு அனுமதி கேட்டு சுப்ரீம் கோர்ட்டை நாட போவதாக ஏ.ஐ.சி.டி.இ. தெரிவித்து உள்ளது. இதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தால் கல்லூரிகளை திறக்கும் தேதி தள்ளிப் போகலாம்.

No comments:

Post a Comment