என்ஜினீயரிங் சேர உள்ள முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் இப்போதே தாசில்தாரிடம் அதற்கான சான்றிதழை வாங்கி வைத்திருங்கள் என்று அண்ணா பல்கலைக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
2½ லட்சம் விண்ணப்பங்கள்
பிளஸ்–2 முடித்த மாணவர்–மாணவிகள் 8¾ லட்சம் பேர் தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.
அவர்களில் 30 சதவீதத்தினர் என்ஜினீயரிங் (பி.இ., பி.டெக்.) படிக்க உள்ளனர். பிளஸ்–2 தேர்வு முடிவு மே மாதம் 9–ந்தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் என்ஜினீயரிங் சேர உள்ள மாணவ–மாணவிகளுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்ப படிவங்களை அச்சடித்து தயாராக வைத்திருக்கிறது.
மே மாதம் முதல் வாரத்தில் இந்த விண்ணப்பங்கள் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழ்நாடு முழுவதும் 60 மையங்களில் வழங்கப்பட உள்ளது.
முதல் தலைமுறை பட்டதாரிக்கான சான்றிதழ்
என்ஜினீயரிங் படிக்க உள்ள மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கலந்தாய்விற்காக விண்ணப்பிக்கும் போது அவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகளாக இருந்தால் அதற்கான சான்றிதழை தாசில்தாரிடம் பெறவேண்டும். மேலும் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் (நேட்டிவிட்டி) என்ற சான்றிதழையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
அப்போது நிறையபேர் விண்ணப்பிப்பதால் சான்றிதழ் பெற தாசில்தார் அலுவலகத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே மாணவர்கள் தங்கள் சிரமத்தை தவிர்க்க இப்போதே சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். இந்த தகவல் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பித்த பின்னர் ‘ரேங்க்’ பட்டியல் வெளியிடுவது, கலந்தாய்விற்காக அழைப்பது போன்ற முழு விவரமும் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான முன் ஏற்பாடு பணிகளை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம்.ராஜாராம், மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரிய ராஜ் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment