Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 18 April 2014

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிக்கு நிர்ப்பந்திக்கக்கூடாது பள்ளி கல்வித்துறைக்கு, தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உத்தரவு

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிக்கு நிர்ப்பந்திக்கக்கூடாது என்று பள்ளி கல்வித்துறைக்கு, தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்கள் தவிப்பு–கலக்கம்
தமிழ்நாட்டில் வரும் 24–ந்தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மண்டலம் வாரியாக 1,100 பேர் வீதம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சியில் ஈடுபட ஆசிரியர்களுக்கு செல்போன் எஸ்.எம்.எஸ். மூலமாக தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்து வருகிறது.
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான ஆசிரியர்கள் 12–ம் வகுப்பு மற்றும் 10–ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் பயிற்சியில் ஈடுபட போகும் ஆசிரியர்கள் தேர்தல் ஆணையத்தின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் கடிதம் அளித்தால் மட்டுமே பயிற்சிக்கு செல்ல அனுமதி அளிக்கப்படும் என்றும், இல்லை என்றால் விளக்க நோட்டீசு (மெமோ) அனுப்பப்படும் என்றும், ஆசிரியர்களை தேர்வுத்துறை எச்சரித்து வருகிறது.
தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்தல் ஆணையம் அனுப்பும் எஸ்.எம்.எஸ். தகவல் அடிப்படையில் பயிற்சியில் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும், இல்லையென்றால் சட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்று தேர்தல் ஆணையம் மறுபுறம் ஆசிரியர்களை எச்சரித்து வருகிறது.
தேர்தல் ஆணையம், மற்றும் பள்ளி கல்வி தேர்வு துறை முடிவால் ஆசிரியர்கள் குழப்பத்திலும், கலக்கத்திலும் தவித்து வருகிறார்கள்.

பள்ளிக்கல்வி துறைக்கு உத்தரவு
இதுதொடர்பாக நேற்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது அவர் கூறும்போது, ‘நேரமின்மை காரணமாக தேர்தல் பயிற்சியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு எழுத்துப்பூர்வ கடிதம் அனுப்ப முடிவதில்லை. செல்போன் எஸ்.எம்.எஸ். மூலமாக தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. பயிற்சியில் கலந்துகொள்ளாத ஆசிரியர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதில் மாற்று கருத்து கிடையாது.’ என்றார்.
பின்னர் சிறிது நேரத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் த.சபீதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரவீன்குமார் ‘தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் எஸ்.எம்.எஸ்–சை காட்டினாலே அனுமதிக்க வேண்டும். எழுத்துப்பூர்வ கடிதம் கேட்டு ஆசிரியர்களை நிர்ப்பந்திக்கக்கூடாது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை உடனடியாக அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.
இவ்வாறு பிரவீன்குமார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment