ஆசிரியர் எச்சில் துப்பியதை அவமானமாக கருதிய 9ம் வகுப்பு பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றவர், கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று அந்த மாணவி இறந்தார். எனவே, போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கை பதிவு செய்து ஆசிரியையை தேடி வருகின்றனர்.திருவொற்றியூர் அப்பர்சாமி கோயில் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி. தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது மனைவி ஷோபனா. இவர் அதே பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் பவித்ரா (14). திருவொற்றியூரில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.கடந்த மாதம் 25ம் தேதி பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த பவித்ரா, உடலில் கெரசின் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் கருகி உயிருக்கு போராடிய பவித்ராவை, அக்கம்பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
பவித்ராவின் தாய் சோபனா மற்றும் அவரது சகோதரர் பார்த்திபன் ஆகியோர் போலீசாரிடம் தெரிவித்ததாவது:கடந்த 25ம் தேதி வகுப்புக்குள் சக மாணவியரிடம் பவித்ரா பேசியதாகவும், அதில் ஆத்திரமடைந்த வகுப்பாசிரியை கடுமையாக திட்டி, வாயில் மென்று கொண்டிருந்த திராட்சை தோலை அவர்மீது துப்பியதாகவும், இதில் மனமுடைந்த பவித்ரா கெரசின் ஊற்றி தீவைத்து கொண்டார். எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.இச்சம்பவம் குறித்து கல்வித்துறை இணை இயக்குநர் உஷாதேவி, குழந்தைகள் நல உரிமை ஆணைய தலைவர் சரஸ்வதி ஆகியோர் விசாரணை நடத்தினர்.இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பவித்ரா நேற்று காலை இறந்தார். இறந்த பவித்ராவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பள்ளி மாணவி இறந்ததால் அப்பர்சாமி தெருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியையை போலீசார் தேடி வருகின்றனர்.
உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பவித்ராவின் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்தனர். பவித்ரா தற்கொலைக்கு காரணமான ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவலறிந்து கீழ்ப்பாக்கம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment