ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளன என்றும் விதிகளை மீறும் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மக்களவைத் தேர்தல் ஏப்.24-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் புதன்கிழமை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் செலவினங்களை கண்காணிக்கும் வகையில் பறக்கும் படைகள், காவல் நிலைக் குழுக்கள், விடியோ கண்காணிப்புக் குழுக்கள், கணக்கு தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இப்படைகள் 24 மணி நேரமும், மூன்று ஷிப்ட்களில் செயல்படும். வாக்காளர்களை கட்டாயப்படுத்துதல், பயமுறுத்துதல், சமூகவிரோத சக்திகளின் நடமாட்டம், மதுபானம் விநியோகித்தல், ஆயுதங்கள், பணம் குறித்தும் வரும் புகார்கள் மீது இக்குழுவினர் நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மேற்கொள்ளும் பேரணிகள், கூட்டங்கள் ஆகியவற்றை விடியோ கண்காணிப்புக் குழுக்களுடன் இணைந்து விடியோவில் பதிவு செய்வார்கள். வேட்பாளர்கள் மேற்கொள்ளும் செலவினங்கள் குறித்து எழும் புகார்கள்
குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிப்பார்கள்.
வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக வைத்திருக்கும் பணம், பரிசுப் பொருள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுப்பார்கள். பறக்கும் படை அலுவலர்கள் ஒலிபெருக்கிகள் மூலம் மாதிரி நடத்தை விதிமீறல்கள் குறித்தும், பெருமளவு பணம் கொண்டு செல்வதை தவிர்ப்பது குறித்தும் பொதுமக்களும், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் அறிந்துகொள்ளும் வகையில் பிரசாரம் மேற்கொள்வார்கள்.
பறக்கும்படை அலுவலர்கள், காவல் நிலைய கண்காணிப்பு அலுவலர்கள் வாகன தணிக்கையின்போது ரூ.50,000-க்கு மேல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும், வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதற்காக கொண்டுச்செல்லப்படுவதாக சந்தேகப்பட்டாலும், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக சந்தேகிக்கப்படும் ரூ.10,000-க்கு மேற்பட்ட போதை மருந்துகள், மதுபானங்கள், ஆயுதங்கள், பரிசுப் பொருள்கள் ஆகியவற்றை கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்களின் கைப்பைகளை பெண் அலுவலர்கள் மட்டும் தான் சோதனை செய்வார்கள். பரிசுப்பொருள்கள், பணம் பறிமுதல் செய்யும்போது கைப்பற்றுகை மகஜர் தயார் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வழங்கப்படும்.
பறிமுதல் செய்த பொருள்களை திரும்பப் பெறுவதற்காக தேர்தல் செலவின கண்காணிப்பு ஒருங்கிணைப்பு அலுவலர் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஈரோடு முன்பாக முறையீடு மனு செய்யலாம்.
இம்மனுக்கள் மீது உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும். உரிய ஆதாரங்கள் கொடுத்தால் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் திருப்பி வழங்கப்படும். உரிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லையெனில் சம்பந்தப்ப்டட பொருள்கள் வருமான வரித்துறை அதிகாரிகளின் மேல்நடவடிக்கைக்காக அனுப்பப்படும்.
தேர்தல் நடத்தை விதிகள் மீறல் தொடர்பாக 18004257022 என்ற தொலைபேசி எண்ணுக்கு இலவசமாக அழைத்து புகார் செய்யலாம். அதேபோல erode2014complaints@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் புகார் அனுப்பலாம் என்றார்
No comments:
Post a Comment