மக்களவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது. ஏப்ரல் 7 முதல் 10ம் தேதிக்குள் முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் என்று தெரிகிறது.தற்போதுள்ள 15வது மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 1ம் தேதியுடன் முடிகிறது. எனவே, மே 31ம் தேதிக்குள் புதிய மக்களவை அமைக்கப்பட வேண்டும். இதற்கான தேர்தலை நடத்த, தேர்தல் ஆணையம் பல மாதங்களாக ஏற்பாடு செய்து வருகிறது. இந்த ஏற்பாடுகள் முழு வீச்சில் முடிக்கப்பட்டு விட்டதை தொடர்ந்து, தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று காலை 10.30க்கு டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் அறிவிக்க உள்ளதாக அரசு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் தலைமையில் நேற்று நடைபெற்ற தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டத்தில், தேர்தல் தேதி, எத்தனை கட்டங்களாக வாக்குப்பதிவை நடத்துவது, பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில், இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவை நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், இதை 6 கட்டங்களாக குறைப்பது பற்றியும் கடைசி நேர முயற்சியாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக அந்த வட்டாரங்கள் கூறின. முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 7 முதல் 10ம் தேதிக்குள் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது மேலும், மக்களவை தேர்தலுடன் ஆந்திரா, சிக்கிம், ஒடிசா ஆகிய மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வருகின்றன.
No comments:
Post a Comment