Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday 25 March 2014

ஆதார் அட்டை உத்தரவை வாபஸ் பெற வேண்டும்: உச்ச நீதிமன்றம் ஆணை

அரசு சேவைகளைப் பெற ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தால் அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ஆதார் அடையாள அட்டைக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து கிடையாது என்று அறிவிக்கக் கோரி ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்கில், "அரசு சேவைகளைப் பெற ஆதார் அடையாள அட்டை கட்டாயமில்லை' என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், பாலியல் பலாத்கார வழக்கு விசாரணை தொடர்பான வழக்கு ஒன்றில், ஆதார் அடையாள அட்டைக்காக சேகரிக்கப்பட்ட தகவல்களை சிபிஐக்கு தர வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றத்தின் கோவா அமர்வு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதார் அட்டைகளை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் (யுஐடிஏஐ) தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். சௌஹான், ஜே. செலமேஸ்வர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், "குற்றம் சாட்டப்பட்டவரின் எழுத்துப்பூர்வமான ஒப்புதலின்றி ஆதார் அடையாள அட்டை பெறுவதற்கு அளிக்கப்பட்டுள்ள தகவல்களை எந்த ஒரு அரசு அதிகாரிக்கும் அளிக்க கூடாது. அரசு சேவைகளைப் பெற ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக்க மத்திய அரசு ஏதாவது உத்தரவு பிறப்பித்திருந்தால் அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.
 முன்னதாக கோவா நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் தாக்கல் செய்த மனுவில், "கோவா நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும்.
 இதேபோன்று பல்வேறு வழக்குகளில் விசாரணை அமைப்புகள் தங்களுக்கு தகவல்கள் கோரி ஆதார் ஆணையத்தை அணுகக் கூடும். பொது மக்களிடம் இருந்து பெற்ற பயோமெட்ரிக் தகவல்களை அவர்களின் அனுமதியில்லாமல் தெரிவிக்க முடியாது என இந்தத் திட்டத்தின் விதிமுறையில் உள்ளது.
 இதுவரை 60 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தானாக முன்வந்து ஆதார் அடையாள அட்டை பெறுவதற்கு தகவல் அளித்துள்ளனர். அதை வெளியிடுவது அவர்களின் அடிப்படை உரிமைக்கு எதிரானது.
மேலும், பொது மக்கள் அளித்துள்ள தங்கள் கைரேகைகளை குற்றவாளிகளின் கைரேகைகளோடு ஒத்துப் போகிறதா என்பதை சோதனை செய்வது என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் உருவாக்கப்பட்ட நோக்கத்துக்கும் எதிராக அமைந்துவிடும். தனி மனிதனின் தகவல்கள் பாதுகாக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் உரிமை. அதை இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் நிச்சயம் நிறைவேற்றும்' என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்னணி: கோவாவில் உள்ள வாஸ்கோடகாமா பகுதியில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தின் கோவா அமர்வு கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. அதில், "ஆதார் அடையாள அட்டைக்காக பெறப்பட்ட கைரேகை தகவல்களை இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் சிபிஐக்கு  வழங்கி இந்த வழக்கின் விசாரணைக்கு உதவ வேண்டும்.
ஆதார் அடையாள அட்டைக்காக சேகரிக்கப்பட்ட கைரேகையுடன் குற்றம் சாட்டப்பட்டவரின் கைரேகையை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு நிபுணர் ஒருவரை நியமிக்க வேண்டும்' என்று கோவா காவல்துறை தலைவருக்கும், மத்திய கைரேகை  மற்றும் அறிவியல் ஆய்வகத்துக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

No comments:

Post a Comment