பாலியல் புகார் கொடுத்த பேராசிரியை லயோலா கல்லூரியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கல்லூரி நிர்வாகம் பழிவாங்கிவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். லயோலா கல்லூரி தமிழ்துறையில் உதவி பேராசிரியையாக பணி புரிந்தவர் ஜோஸ்பின் ஜெயசாந்தி. இவர் தனக்கு தமிழ்துறை தலைவர் பேராசிரியர் ராஜராஜன் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், அதற்கு உடந்தையாக பேராசிரியர் பிரின்ஸ் இருப்பதாகவும் சமீபத்தில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இந்நிலையில், ஜோஸ்பின் ஜெயசாந்தி கல்லூரியில் இருந்து கடந்த 28ம்தேதி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்து ஜோஸ்பின் ஜெயசாந்தி சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: லயோலா கல்லூரியில் 2007 முதல் பணிபுரிந்து வருகிறேன். அப்போதிருந்தே துறை தலைவரான ராஜராஜன் எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தார். அதற்கு பேராசிரியர் பிரின்ஸ் உடந்தையாக செயல்பட்டார்.
இதுகுறித்து கல்லூரியில் உள்ள பாலியல் வன்கொடுமை விசாரணை குழுவிடம் புகார் செய்தேன். அந்த குழு விசாரித்து அறிக்கை கொடுத்தும் எந்த சிறு நடவடிக்கை கூட இல்லை. அந்த குழுவின் அறிக்கையையாவது எனக்கு தர வேண்டும் என்று கேட்டேன். அதையும் தரவில்லை. இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தேன்.அதன்படி, ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டேன். அவர்களும் கல்லூரி முதல்வரிடம் விசாரித்து விட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதாக கூறிவிட்டனர். நான் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என முதல்வர் தவறான தகவலை தெரிவித்துள்ளார். இந்நிலையில் என்னை பணியில் இருந்து கடந்த 28ம்தேதி நீக்கிவிட்டனர். எந்த முன்னறிவிப்புமின்றி நிர்வாகம் என்னை நீக்கியுள்ளது. நான் புகார் கூறிய பேராசிரியர்கள் கல்லூரி நிர்வாகத்தால் பாதுகாக்கப்பட்டுள்ளனர். பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்ட என்னை நீக்கி விட்டு, குற்றச்சாட்டு உள்ள பேராசிரியர் பிரின்ஸ் அரசு உதவி பெறும் ஆசிரியர் பணிக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நியாயம் கேட்டு தொடர்ந்து போராடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment