ப்ளஸ் 2 தேர்வர்களின் முழு விவர பட்டியலை, தேர்வு துறை வழங்காததால், நேற்று, மாவட்ட கல்வி துறை அதிகாரிகள் சிரமத்திற்கு ஆளாகினர். தமிழ்நாடு பள்ளிக் கல்வி தேர்வு துறை இயக்குனரகம் சார்பில், நேற்று, ப்ளஸ் 2 பொதுத் தேர்வு, மாநிலம் முழுவதும் நடந்தது. தேர்வில், எவ்வித முறைகேடும் நடந்து விடக்கூடாது என்பதற்காக, விடைத்தாளில் ரகசிய குறியீடு எண், தேர்வர் புகைப்படம், விடைத்தாள் மையம் பாதுகாப்பு என, பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. கல்வி துறை, அந்தந்த மாவட்டத்தில், தேர்வு எழுதும் மாணவர்களின் முழு விவரப் பட்டியலை, மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் கொடுக்கவில்லை. மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டு வரை, ஒவ்வொரு பள்ளியிலும், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம், தேர்வு துறை இயக்குனரகத்திற்கு அனுப்பப்படும். ஆனால், நடப்பாண்டு, அந்தந்த பள்ளிக்கு என, தனியாக, இ மெயில் முகவரி கொடுக்கப்பட்டு, தலைமை ஆசிரியர் மூலம், புள்ளி விவரங்கள், தேர்வு துறைக்கு நேரடியாக அனுப்பப்பட்டன. தேர்வு நாளான நேற்று, மொத்த மாணவரின் விவரங்கள் கிடைக்கும் என எதிர்பார்த்தோம்; ஆனால் வரவில்லை. தேர்வரின் விவரங்கள், அந்தந்த பள்ளி மற்றும் மையங்களுக்கு மட்டுமே தெரியும். மொத்த விவரம், எங்களுக்கு வழங்காததால், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம், புள்ளி விவரங்கள், சரியாக கொடுக்க முடியாத நிலையே நீடிக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment