பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் பெண்களுக்கு, எத்தகைய முறையில், டாக்டர்கள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து, மத்திய அரசு, புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. "கண்டிப்பாக, இரு விரல் சோதனை நடத்தக் கூடாது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் பெண்கள், உண்மையிலேயே பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளனரா என்பது குறித்து ஆராய, டாக்டர்கள், தங்கள் இரு விரலை, பாதிக்கப்பட்ட பெண்ணின் மர்ம உறுப்பில் நுழைத்து ஆராய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். "இந்த முறை, அறிவியல்பூர்வமானது அல்ல' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதற்குப் பதில், அதற்கென உள்ள, பிற, மருத்துவ ஆய்வு கருவிகளைப் பயன்படுத்த வேண்டும். ஆய்வுக்கு உள்ளாகும் நேரத்தில், அந்தப் பெண்ணும், டாக்டரும் தான், அந்த அறையில் இருக்க வேண்டும்; மூன்றாம் நபர் இருக்கக் கூடாது. ஆண் டாக்டராக இருந்தால், அங்கு, பெண் உதவியாளர் அவசியம் இருக்க வேண்டும். மருத்துவ பரிசோதனைக்காக, மாதிரிகள் எடுத்து, அதை, வெளியே தெரியுமாறு வைக்கக் கூடாது. மாதிரிகளின் பெயர்களை, வெளியே தெரியுமாறு எழுதக் கூடாது. அதற்கான படிவங்களில் தான் எழுத வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணிடம், ஆறுதலாக பேச வேண்டும். தனியறையில், பாதுகாப்பாக அந்தப் பெண்ணை வைத்திருக்க வேண்டும். தேவையற்ற கேள்விகள் கேட்கக் கூடாது. டாக்டர்களின் மருத்துவ ஆய்வுக்கு, போலீசின் அனுமதி தேவையில்லை. பாதிக்கப்பட்ட பெண் அளிக்கும் புகாரே போதுமானது. பாதிக்கப்பட்ட பெண்ணிடம், ஆய்வு மேற்கொள்வதற்கு முன், அப்பெண்ணை, வேறு உடை அணிய அனுமதிக்க வேண்டும். "கற்பழிப்பு' என்ற வார்த்தை, குற்ற நடைமுறை வார்த்தை; அதை, டாக்டர்கள் பயன்படுத்தக் கூடாது. மாறாக, மருத்துவ வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். இத்தகைய வழிமுறைகளை, மத்திய, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் வெளியிட்டுள்ளன. சாதாரண, துணை மருத்துவ மையம் துவங்கி, பெரிய மருத்துவமனைகள் வரை, புதிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment