காலை, மாலை நேரங்களில், பரவலாக மின்தடை செய்யப்படுவதால், பொதுத் தேர்வுக்கு படிக்க முடியாமல், மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர்.
பிளஸ் 2, பொதுத் தேர்வு, நேற்று முன்தினம், தமிழ் முதல்தாளுடன் துவங்கியது. வரும், 25ம் தேதி வரை நடக்கிறது. 10ம் வகுப்பு தேர்வு, 26ம் தேதி துவங்கி, அடுத்த மாதம், 9ம் தேதி வரை நடக்க உள்ளது. தேர்வு நேரத்தில், லோக்சபா தேர்தல் பரபரப்பும் துவங்கியிருப்பதால், அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், பிரசாரம் ஆகியவற்றால், மாணவர்கள், தொந்தரவுகளுக்கு ஆளாகி உள்ளனர். போதாத குறைக்கு, காலை, மாலை நேரங்களில், மின்தடை செய்யப்படுவதால், தேர்வுக்கு படிக்க முடியாமல், பல இடங்களில், மாணவ, மாணவியர் அவதிபடுகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பகுதியில், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணி முதல் 10:00 மணி வரையும், நேற்று காலை, 6:00 மணி முதல் 7:00 மணி வரையும், மின் சப்ளை நிறுத்தப்பட்டது. இதனால் மாணவ, மாணவியர் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஊத்துக்கோட்டை மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மின்தடை செய்யக்கூடாது என, நினைக்கிறோம். ஆனால், மெயின் சப்ளையை நிறுத்தினால், நாங்கள் என்ன செய்ய முடியும்' என்றார். திருவள்ளூர் மட்டும் இல்லாமல், சென்னை புறநகர் பகுதிகளிலும், வழக்கம் போல், காலை, மாலை நேரங்களில், மின்தடை செய்யப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமையிலும், மின்தடை செய்யப்படுகிறது. இதனால், தேர்வுக்கு தயாராகும் மாணவர், பாதிக்கப்படுகின்றனர். அரசியல் கட்சி கூட்டங்களுக்காக, 0.5 கி.மீ., - 1 கி.மீ., தூரம் வரை, ராட்சத விளக்குகளை எரிய விடுகின்றனர். இதற்கு தேவையான மின்சாரத்தை, தாராளமாக வழங்கும் அதிகாரிகள், மாணவர்கள் பாதிக்காமல் இருக்க, இரவு நேரங்களில் மட்டுமாவது மின்தடை செய்யாமல் இருக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment