தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கிய பிளஸ்–2 தேர்வை மாணவ– மாணவிகள் உற்சாகத்தோடு கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். காப்பியடிப்பவர்களை பிடிக்க நியமிக்கப்பட்ட பறக்கும் படையினர் தேர்வு மையங்களை கண்காணித்தனர்.
பிளஸ்–2 தேர்வு தொடக்கம்
தமிழ்நாடு முழுவதும் பிளஸ்–2 தேர்வு நேற்று தொடங்கியது. வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 41 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதுவதற்காக மொத்தம் 130 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் 62 மாற்றுத்திறனாளி மாணவ– மாணவிகளும் தேர்வு எழுதினர். ஒவ்வொரு மையத்திலும் தலா 2 பேர் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தனர்.
தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மாணவ– மாணவிகள் காலையிலேயே எழுந்து வீட்டிலும், அருகாமையில் உள்ள கோவிலுக்கும் சென்று சாமி கும்பிட்டுவிட்டு தேர்வு மையங்களுக்கு செல்லத் தொடங்கினார்கள். அதாவது காலை 9 மணியில் இருந்தே தேர்வு மையங்களுக்கு உற்சாகத்தோடு வரத்தொடங்கினார்கள். அப்போது ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
பின்னர் அவர்கள் பள்ளிக்கூட வராந்தாவிலும், பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியிலும் கூட்டம், கூட்டமாக அமர்ந்து தாங்கள் ஏற்கனவே படித்த பாடங்களை திருப்பி பார்த்துக் கொண்டனர். அத்துடன் பாடத்தில் இருந்த சந்தேகங்களை தங்களுடைய தோழிகளிடமும், நண்பர்களிடமும் கேட்டுத் தெரிந்து கொண்டனர். பின்னர் பள்ளிகளில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
கேள்வித்தாளை படித்து பார்க்க...
தேர்வு நேரம் நெருங்கியதும் மாணவ– மாணவிகள் மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மையத்திற்கு சென்றவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு சென்று அமர்ந்தனர். முதல் நாளான நேற்று தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. 10 மணிக்கு மாணவ– மாணவிகளுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது.
முதல் 10 நிமிடம் வினாத்தாளை படித்து பார்ப்பதற்கும், பின்னர் 5 நிமிடம் விடைத்தாளை பூர்த்தி செய்வதற்கும் ஒதுக்கப்பட்டது. 10.15 மணிக்கு தேர்வு தொடங்கியது.
கலெக்டர் நந்தகோபால், முதன்மை கல்வி அலுவலர் சுப்பிரமணி, வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் மனோகரன், திருப்பத்தூர் கல்வி மாவட்ட அலுவலர் பிரிதர்ஷினி உள்பட 9 சிறப்பு பறக்கும் படையினர் தேர்வு மையங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர்.
ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் 2 பேர் பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தேர்வு நடைபெற்ற அறைகளுக்கு சென்று கண்காணித்துக் கொண்டிருந்தனர். பகல் 1.15 மணியளவில் தேர்வு முடிவடைந்தது.
அமைச்சர் வீரமணி ஆய்வு
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், ஆம்பூர் ஆகிய இடங்களில் தேர்வு மையங்களுக்கு சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஒவ்வொரு அறையாக சென்று பார்வையிட்டார். ஒரு மாணவியிடம் கேள்வி எப்படி வந்துள்ளது என்றும், தைரியமாக தேர்வு எழுதும்படி கூறினார்.
அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் தேர்வு நடந்து வருகிறது. பிளஸ்–2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். அதற்கான தேதியை தமிழக முதல்–அமைச்சர் விரைவில் அறிவிப்பார் என்றார்.
No comments:
Post a Comment